பெருஞ்சிலைகளை விஞ்சிய பேரறிவுச் சிலை!

Published On:

| By Kavi

பழ அதியமான்

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை அமைந்து கால் நூற்றாண்டு ஆகிறது. அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடும் விதத்தில் அந்தத் திருவள்ளுவர் சிலைக்குப் பேரறிவுச் சிலை (statue of wisdom) என்று பெயர் சூட்டியிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

கன்னியாகுமரியின் வள்ளுவர் சிலை இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய சிலை. நின்ற கோல சிலைகளில் உலகத்திலேயே 32 வது இடத்தை அது பெறுகிறது. உலகம் முழுவதும் அரசர்களும் இறைவர்களும் மதத்தலைவர்களும் சிலைகளாய்க் காட்சிதர இலக்கியவாதி ஒருவர் எழிலோடு உயர்ந்து கடலில் நிற்கும் உலகின் ஒரே பெரிய சிலை கன்னியாகுமரியின் வள்ளுவர் சிலை.

நீர்மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே மிக உயரமான 133 அடி அளவு உள்ள சிலை அது…

ஆம்… திருவள்ளுவருக்கு நாம் சிலை அமைத்திருக்கிறோம். ஆனால் அவரோ திருக்குறளில் சிலை என்கிற சொல்லைக் கூட வைக்கவில்லை. கொலையைப் பத்து இடங்களில் செய்தவர், மலையை ஒன்பது இடங்களில் உருவாக்கியவர், சிலையைத் தொடவில்லை; சிற்பத்தையும் கூட.

திருக்குறளின் 14000 சொற்களில் ஒரு இடத்தில் கூட சிலை என்று எழுத்தில் வரவில்லை. சிலை என்கிற கருத்தாக்கம் அவர் காலத்தில் இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது. இருந்தும் பயன்படுத்தாது கூட அவர் விட்டிருக்கலாம். ஒள என்ற உயிரெழுத்தை அவர் பயன் கொள்ளவில்லை. அதனால் அது தமிழ் நெடுங் கணக்கில் இல்லை என்றாகிவிடுமா, என்ன? இராமாயணத்தில் அதாவது இதிகாச காலத்திலேயே காணாமல் போன சீதையின் உருவம் செய்து பிரார்த்தித்ததாகக் கதை உண்டு.

சிலையும் தமிழும்

சிலைக்குச் சிலை (statue) என்ற பொருள் தமிழில் முன்பு வழக்கில் இல்லை. சிலைக்கு வில் என்பதே பழம்பொருள். “சிலை எழுபது ” என்று கம்பர் எழுதியதாக கூறப்படும் நூல் வில் பற்றியதே. அண்மைக்கால பாரதியும் வில் என்கிற பொருளிலேயே தான் சிலை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். “வெஞ்சிலை வீரன் பல்சொல் விரித்தான் ” ( ஆரிய தரிசனம்) என்பது அவர் எழுத்து. வில் மட்டுமல்ல தனுராசி, மார்கழி, வானவில், ஒளி, கல், மழை, அம்மி, கலுவம், உருவம், கோபம், மரவகை, ஒளி, கோபி, பின்வாங்கு எனப் பல பொருள்களையும் பல அகராதிகள் வழங்குகின்றன. இதில் உருவம், கல் போன்ற பொருள்களே இன்று சிலைக்கு வந்துள்ளன.

தென்னாடும் சிலையும்

திராவிட நாட்டில் ஒரு இலக்கியவாதிக்கு இவ்வளவு உயரச் சிலை தமிழ்நாட்டில் தான் எழுப்பப்பட்டுள்ளது. கேரளத்தில் திருவள்ளுவருக்கு இணையாக புகழ்படைத்த எழுத்தச்சனுக்குத் துஞ்சன் பரம்பில் உட்கார்ந்த நிலையில் ஒரு சிலை உண்டு. உள்ளூர் பரமேஸ்வர ஐயர், வள்ளத் தோல் நாராயண மேனன், குமாரன் ஆசான் ஆகிய மூன்று கேரள மகாகவிகளுக்கும் சிலைகள் இருக்கின்றன. ஆனால் அவை பெரியவை அல்ல.

கேரளத்தில் நான் பார்த்த அளவில் திருச்சூரில் கொச்சி மகாராஜா, திருவனந்தபுரத்தில் திவான் மாதவராவ், வைக்கத்தில் மன்னத்து பத்மநாபன் சிலைகள் சற்று பெரியன. கர்நாடகத்தில் சரவணபெலகோலாவில் சமண முனிவரின் பெருஞ்சிலை (57 அடி) உண்டு. மதச் சிலைகளைத் தவிர இலக்கியவாணரின் பெருஞ்சிலை ஏதும் கர்நாடகத்தில் இருப்பதாக விசாரித்தவரை தெரியவில்லை.

திருவள்ளுவருக்கு ஈடாக நாம் பரிமாறிக் கொண்ட சர்வக்ஞருக்கு இவ்வளவு பெரிய சிலை இல்லை. இன்னொரு கன்னட ஆளுமையான பசவண்ணாவுக்குப் பெங்களூருவில் சிலை உண்டு என்றாலும் அது பெரியது அல்ல. தெலுங்கு தேசத்தில் சமுதாயவாதி அம்பேத்கருக்கும் (125 அடி), உசைன் சாகர் நீர் நிலை நடுவில் சமயவாதி புத்தருக்கும் (58 அடி) அழகிய சிலைகள் அமைந்துள்ளன. என்றாலும் வள்ளுவரைப் போல இலக்கியவாதிகளுக்குப் பெருஞ்சிலைகள் தெலுங்கு தேசத்தில் இல்லை.

திருப்பதியில் உள்ள எம். எஸ். சுப்புலட்சுமி, அன்னமய்யா சிலைகள் இசைக்கலைஞர் என்ற வகைப்பாட்டில் வருவன. மேலும் ஒப்பீட்டளவில் சிறியவை. தமிழ்நாட்டில் தான் இலக்கியவாதிக்குப் பெருஞ்சிலை ஒன்று இயன்றிருக்கிறது.

தலைநகரில் வள்ளுவர் சிலைகள்

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் உள்ளதைத் தவிர வேறு மூன்று வள்ளுவர் சிலைகள் குறிப்பிடத்தக்கன. இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி 1968 இல் கடற்கரைச் சாலையில் உருவான தமிழறிஞர்கள் சிலைகளுள் ஒன்று வள்ளுவர். அச்சிலை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு நேர் எதிரே நின்ற கோலத்தில் அமைந்துள்ளது. அதன் உயரம் சில பல அடிகள் இருக்கலாம். இன்னொன்று மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரிக்கு எதிரில் அமர்ந்த வடிவிலான ஒரு சிலை.

மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு ஒரு கோயில் உள்ளது. அதில் அமர்ந்து நிலையில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிலை உண்டு . ஆனால் அது பாந்தமற்றது. தாகூர் கூட அந்தக் கோயிலுக்கு வந்துள்ளார், சிலையைப் பார்த்துள்ளார். என்ன நினைத்தாரோ? எவ்வகையிலும் பார்க்க கன்னியாகுமரியில் திகழ்வது எழில் கசியும் கம்பீரமான சிலை.

தெய்வச்சிலைகளே வழமை

மேற்கைப் போலல்லாமல் இந்திய சிற்பங்கள் புறத்தோடு அகத்தையும் வடிப்பன. தொடக்கத்தில் சிலைகள் அரசர்களுக்கும் தெய்வங்களுக்குமே உருவாக்கப்பட்டன. தெய்வச் சிலையார் ( 15 ஆம் நூற்றாண்டினர்) என்ற பெயரிலேயே ஒரு உரையாசிரியரும் கூடத் தமிழில் உண்டு. நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் என்று உருகும் திரைப்படக் காதலனும் “திருக்கோயிலே ஓடிவா ” என்று காதலியின் நினைவைக் கோயில் சிலையாகவே பார்க்கிறான். “கும்பிட்டு கண்ணடிப்பான் போல”.

நவீன கால சிலைகள்

தெய்வங்களுக்குப் பிறகு மனிதர்களுக்குச் சிலைகள் உருவாயின. தெய்வ நம்பிக்கை அற்று மனிதர்களை நம்பியவராயினும் நேரு உயிருடன் உள்ள மனிதர்களுக்குச் சிலை வைக்க விரும்பாதவர். எனினும் தன் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு கர்மவீரர் காமராசருக்குச் சென்னையில் சிலை திறந்தார். சென்னை ஜிம்கானா கிளப் அருகில் குதிரை ஏறிய மன்றோ சிலைக்கு எதிரில் வேட்டியுடன் கம்பீரமாக நிற்கும் சிலை, நேரு திறந்தது தான். அந்த இடத்தில் “புகழ் விரும்பி ” வெலிங்டன் பிரபுவின் சிலை தான் முன்பிருந்தது. முதல் இந்திய விடுதலைப் போரின் நூற்றாண்டை யொட்டி ஏகாதிபத்திய பிரதிநிதிகளின் சிலைகள் இந்தியாவில் பொது இடங்களில் இருக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கருதியதன் அடிப்படையில் 1937 லிருந்து அவ்விடத்தில் விளங்கிய வெலிங்டன் சிலை 1957 இல் கோட்டை மியூசியம் சென்றது. அந்த சிலை இருந்த பீடத்தில் தான் 1961 இல் காமராசர் வந்து நின்றார்.

சிலை உருவாவதின் சிரமம்

வைக்கலாம் என்று இரவு முடிவு செய்து மறுநாள் காலையில் பிரதிஷ்டை செய்யப்படுவனவல்ல சிலைகள். கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை 1990 இல் செய்யத் தொடங்கி 1999 இல் தான் வடித்து முடிக்கப்பட்டது. எந்த செய்யப்பட்ட சிலையும் ஜல வாசம், தானியவாசம், ரத்தின வாசம், தன வாசம், வஸ்திர வாசம், சயனவாசம் எனப்படும் பல சோதனைகளைக் கடந்தே ஒரு முடிவான சிலையாகிறது. இந்தச் சோதனைகள் காலத்தை வென்று நிற்க விரும்பிச் செய்யப்படும் எந்தச் சிலைக்கும் உகந்தது தான்.

தண்ணீரில் சிலையை 48 நாட்கள் முழுக வைத்திருப்பது என்பது கண்ணுக்குத் தெரியாத துளைகள் ஏதேனும் சிலையில் இருந்தால் அச்சோதனையில் அவை தெரிந்துவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட பலவகை தண்ணீரையே இந்த நீர் முழுக்காட்டலுக்குப் பயன்படுத்துவர். அதைப்போல பல வகை தானியங்களின் சூழ்நிலையில் சிலை வைக்கப்படுவது தானிய வாசம். தானியம் தரும் வெப்பத்திற்குப் பிறகும் சிலை சிதைவின்றி நீடிக்கின்றனவா என்பது அச்சோதனையில் சோதிக்கப்படும். இத்தகைய ஆறு சோதனைகள் 288 நாட்கள் நிகழ்த்தப்படும். இதன் மூலமாகப் பொருத்தமான கல்லில் தான் சிலை உருவாகியுள்ளது என்பது உறுதியாகும். அதற்குப் பிறகுதான் அது சரியான சிலை என்று முடிவு செய்வர்.

அனுபவமும் திறமையும் மிக்க கணபதி ஸ்தபதி என்ற பெருந்தச்சரால் உருவாக்கப்பட்டதால் இத்தகைய சோதனைகளை வள்ளுவரும் கடந்திருப்பார் என்று நம்பலாம். தச்சன், வர்தஹி, சூத்ரகாரி என்ற மூன்று நிலைகளைக் கடந்து நான்காவது பெரு நிலையில் உள்ள பெருந்தச்சரே ஸ்தபதி எனப்படுகிறார்.

அமெரிக்காவின் சுதந்திர தேவி “உலகை அறிவூட்டும் சிலை” எனப்படுகிறார். தெலுங்கு தேசத்தில் எழுப்பப்பட்டிருக்கிற அம்பேத்கர் சிலையைச் “சமூக நீதி சிலை” எனப் புகழ்கின்றனர். எல்லோரையும் சமப்படுத்த முயன்ற ராமானுஜருக்கு எழுப்பப்பட்டிருக்கிற சிலையைச் “சமத்துவ சிலை” என்று அழைத்து மகிழ்கின்றனர். இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்த வல்லபாய் பட்டேலின் சிலையை “ஒற்றுமைச் சிலை ” என்று முழங்குகின்றனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என உலகத்துக்கு அறிவூட்டிய கன்னியாகுமரியில் எழுந்திருக்கிற வள்ளுவர் சிலைக்கு இப்போது ” பேரறிவுச் சிலை” (statue of wisdom) பெயரிட்டிருக்கின்றனர்.

பிறந்த குழந்தைக்குத் தான் பெயர் வைப்பார்கள், வளர்ந்த குழந்தைக்கு யாராவது பெயர் வைப்பார்களா என்று கேட்கலாம். மன்னர்கள் அரியணை ஏறும் போது வம்சப் பெயருடன் பொலிவதில்லையா?

பூராடம் திருநாள் மகாராணி அரியணை ஏறும் வரை சேது லட்சுமி பாய் என்பது தானே அவர் பெயர். மடத்துத் தலைமை ஏற்கும் போது துறவிகள் புதிய பெயரைத் தரிப்பதில்லையா?

அது போல் தான் வள்ளுவர் சிலையை இன்று “பேரறிவுச் சிலை” என்று கொண்டாடுகிறோம்.

கட்டுரையாளர் குறிப்பு:

பழ. அதியமான் தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர். தமிழ்ச் சிந்தனை- வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர். ‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’, ‘வைக்கம் போராட்டம்’ உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதியவர். சின்ன குத்தூசி நினைவு அறக்கட்டளை விருது பெற்றவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

ஆளுநரை சந்தித்த விஜய் – பின்னணியில் பாஜக?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share