திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டாம் என்று உறுதியாக கூறியவர் திருப்பூர் துரைசாமி என்று வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் திமுக – மதிமுக இணைப்பு தொடர்பாக மதிமுக அவைத்தலைவர் துரைசாமி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து பொதுக்குழுவில் பேசவேண்டியதைப் பொதுவெளியில் துரைசாமி பேசி வருவதாகத் துரை வைகோ குற்றம்சாட்டியிருந்தார். மேலும் திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் எந்த நோக்கமும் இல்லை என்று வைகோ கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று (மே 30) மதிமுகவின் அவைத்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலகுவதாகத் திருப்பூர் துரைசாமி அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
”மதிமுகவின் அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி அவர்கள், அந்த பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். அதற்கு சில குற்றச்சாட்டுகளை என்மீது வைத்துள்ளார். இதன் பின்னணியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மதிமுகவின் அவைத்தலைவராக இருந்த துரைசாமி திமுகவுடன் கூட்டணி வரக்கூடாது என்று நினைத்தார். திமுக ஒருகாலமும் ஜெயிக்காது. ஆகவே திமுகவுடன் கூட்டணி கூடாது என்று எங்களது கூட்டங்களிலும் பேசியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று ஏற்பாடு செய்த கூட்டத்தில் துரைசாமியை தவிர, மாவட்டச் செயலாளர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் என மற்ற அனைவரும் வந்திருந்தார்கள். அந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் திமுக உடன் கூட்டணி வைத்துக் கொள்வது தான் சரி என்று சொன்னார்கள்.
தொடர்ந்து ஒரு மாதம் கழித்து மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்திற்குத் திருப்பூர் துரைசாமி வந்திருந்தார். அப்போது திமுகவுடன் போகவே கூடாது என்று உறுதியாக சொன்னார்.
ஆனால் இன்று திமுகவுடன் இணைய வேண்டும் என்ற தனது கருத்தை எதிர்த்த காரணத்தால் ராஜினாமா செய்து வெளியே வந்துவிட்டதாக நேர்மாரான பொய்யான தகவலை அவர் பதிவு செய்துள்ளார்.
திமுகவுடன் நாங்கள் உடன்பாடு வைத்துக் கொள்வது அவருக்கு பிடிக்கவில்லை. தேர்தல் வேலை செய்ய வேண்டாம் என்று கட்சியில் பலரிடத்தில் சொல்லியிருக்கிறார். இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றது.
என்னுடன் பயணித்து வந்ததற்கும் பணியாற்றியதற்கும் நன்றி. ஆனால் என்மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல” என்று பேசினார்.
மோனிஷா
தோனிக்கு கிடைக்கும் மரியாதை எங்களுக்கு கிடைக்குமா? – சாக்ஷி வேதனை!