இந்து முன்னணி அமைப்பினர் வேறு இடத்தில் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. Thiruparangunram hill issue
மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்கா உள்ளது. இங்கு ஏராளமானோர் தினசரி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த தர்காவில் ஆடு, கோழி என உயிர்பலி கொடுக்கக்கூடாது என்று இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து இன்று (பிப்ரவரி 4) போராட்டம் அறிவித்தனர்.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அசாதாரண சூழலை தடுக்க மதுரையில் வெளிநபர்கள் வசிக்காத வகையில் 144 தடை உத்தரவு (163 BNSS) பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு இன்று இரவு 12 மணி வரை அமலில் இருக்கும்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாகி வருகின்றனர். இந்து முன்னணியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் விஸ்வ ஹிந்து பரிஸத் பொறுப்பாளர் ஏ.எம் பாண்டியன், தனியார் விடுதிகளில் தங்கி இருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் Thiruparangunram hill issue

போலீசார் கண்காணிப்பையும் மீறி கோயிலுக்குள் நுழைந்த இந்து முன்னணி மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் பின்புறத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில், “போலீஸ் அராஜகம் ஒழிக” என்று கோஷம் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுதவிர அலகு குத்திக்கொண்டு கோயிலுக்கு வந்தவருடன் சேர்ந்து வந்த பாஜகவினர், ’வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா… காப்போம்… காப்போம்… கோயில்களை காப்போம்’ என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்ட பின்னரே வாகனங்களை போலீசார் அனுமதிக்கின்றனர்.
ஹெச்.ராஜா தடுத்து நிறுத்தம்…
பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா காரைக்குடி அழகாபுரி பகுதியில் இருந்து காரில் புறப்பட்ட போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ”நான் இரண்டு ஆட்களோடு மதுரைக்கு போனால்… உங்கள் ஆட்சியர், மதுரை கமிஷனர் எல்லாம்…. ஏனேன்றால் நான் ஹெச்.ராஜா. ஆனால் இப்போது என் வீட்டு வாசலிலேயே நிறுத்துறீங்க” என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர்
திருப்பூரில் இருந்து தொண்டர்களுடன் திருப்பரங்குன்றம் புறப்பட இருந்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் உட்பட கைது செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றத்துக்கு இந்து முன்னணி அமைப்பினர் செல்லாத வகையில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்று சிவங்கை, விருதுநகர், தேனி, விழுப்புரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பரங்குன்றம் புறப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு…Thiruparangunram hill issue
இந்த நிலையில், தடை உத்தரவை ரத்து செய்து போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா விசாரணை செய்தனர்.
அப்போது போராட்டத்தில் பங்கேற்றால் சட்ட நடவடிக்கை என்பது சரியான முறை இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், “போராட்டம் எங்கு, எப்போது நடத்த அனுமதிக்கப்படும்” என்று கேள்வி எழுப்பினர்.
இன்னோரு அயோத்தி?

இதற்கு தமிழக அரசு சார்பில், “மதுரையில் சில அமைப்பினர் இந்தப் பிரச்சனையை அயோத்தி மற்றும் பாபர் மசூதி போன்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர். மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பிப்ரவரி 11ஆம் தேதி வரை தை பூசம் உள்ளிட்ட விழாக்காலம் என்பதால் இதுபோன்ற சூழலில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது” என்று வாதிடப்பட்டது.
இன்றே ஆர்ப்பாட்டம்! Thiruparangunram hill issue
இந்து முன்னணி அமைப்பு சார்பில், “பிப்ரவரி 11ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா, தைபூசம் விழா ஆகியவை நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் வருகை தரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட போராட்டத்திற்காக மாவட்டம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்து, எங்கள் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த உரிய பாதுகாப்பு வழங்கி ஏன் அனுமதி வழங்கவில்லை. இரண்டு நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றால், எந்த இடத்தில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குவீர்கள் என்று மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும்” என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து அரசு சார்பில், “19 அல்லது 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, மதுரையில் வேறு இடத்தில் அனுமதி வழங்க தயார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மனுதாரர் சார்பில், “நாங்கள் மாற்று இடத்தில் போராட்டம் நடத்த தயார். ஆனால் இன்றே போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு அரசு சார்பில், மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க தயார் என்று பதிலளிக்கப்பட்டது.
ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதி
இதையடுத்து நீதிபதிகள், “பேச்சு உரிமை, கருத்து உரிமை என்பது முக்கியம். எனவே இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
மேலும், ”எந்த மத மற்றும் தனி நபர்களை கொச்சைப்படுத்தி பேசக்கூடாது. கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது” என்று நிபந்தனை விதித்தனர்.
போராட்டத்திற்கு போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றத்தில் பாஜகவினரும், இந்து அமைப்பினரும் குவிந்து வருகின்றனர்.
நேரம் ஆக ஆக திருப்பரங்குன்றத்தில் கூட்டம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Thiruparangunram hill issue