திருமாவளவன் இங்கு வரவில்லை என்றாலும், அவரது மனசு நம்மளோட தான் இருக்கும் என அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அரங்கத்தை அதிரச் செய்தது.
சென்னையில் நந்தம்பாக்கத்தில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 6) நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசுகையில், அம்பேத்கரின் புத்தகம், அவரது வாழ்க்கை சூழல், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை, 2026 தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகம் செய்யவேண்டிய பணி உள்ளிட்டவை குறித்து பேசினார்.
திருமாவளவனின் மனசு நம்முடன் தான்…
முடிவில் விழாவிற்கு அழைத்ததற்காக நன்றி தெரிவித்த விஜய், கடைசியாக ஒரு விஷயம் என்று பேசுகையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று இங்கு வர முடியாமல் போய்விட்டது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், திருமாவளவனின் மனசு முழுக்க முழுக்க இன்று நம்முடன் தான் இருக்கும்” என்று விஜய் பேசினார்.
அதற்கு மேடையில் இருந்த விசிக துணைப்பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா முதல் அரங்கத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த கட்சி தொண்டர்கள் வரை கைத்தட்டலும், கோஷமும் அரங்கை அதிரச் செய்தது.
திருமாவளவன் மனசாட்சி இங்கு தான் இருக்கிறது!
முன்னதாக மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூனா திருமாவளவன் மனசாட்சி இங்கிருப்பதாக பேசினார்.
அவர், “திருமாவளவன் இங்கு இல்லை. ஆனால் அவர் மனசாட்சி இங்கு தான் இருக்கிறது. தலித் மக்களின் சங்கிலியை உடைக்கும் காலச்சூழ்நிலை விரைவில் வரும்.
பட்டியலினத்தை சாராத ஒருவர் அம்பேத்கரின் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற அம்பேத்கர், திருமாவளவனின் கனவு இன்று விஜய் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கால சூழல் காரணமாக திருமாவளவன் பங்கேற்கவில்லை. எனினும் அவரது எண்ணம் முழுவதும் இந்த நிகழ்ச்சியின் மீது தான் இருக்கும்” என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதலில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தவெக முதல் மாநாட்டில் திமுகவை கடுமையாக சாடிய விஜய்யின் பேச்சால் அதிருப்தியடைந்த திருமாவளவன், நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’2026 தேர்தலில் மன்னராட்சிக்கு இடமில்லை’ : ஆதவ் அர்ஜூனா
திமுக வெற்றி பெற முக்கிய பங்காற்றிய ஆதவ் அர்ஜூனா : நூல் வெளியீட்டு விழாவில் வெளியான வீடியோ!