பொதுக்குழு செல்லும் என்ற சாதகமான தீர்ப்பினை பெற்ற எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார் திருமாவளவன்.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து தீர்ப்பினை வரவேற்று தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி தரப்பைச் சேர்ந்த அதிமுகவினர் இனிப்பு, பட்டாசு, பாலாபிசேகம் என்று கொண்டாடி வருகின்றனர்.
அவரது தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றன்றனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், உச்சநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் அதிமுக குறித்து எச்சரிக்கையாக, “உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலம் வழங்கியுள்ள இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: எஸ்.பி. வேலுமணி