வரும் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனும், விஜய்யும் ஒரே மேடையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற கட்சி முதல் மாநாட்டில் கொள்கைகள், செயல்திட்டங்கள் குறித்து பேசினார்.
அப்போது அவர், தங்களது கூட்டணியில் இணையும் கட்சிக்கு ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என விஜய் கூறியது பல்வேறு கட்சி தலைவர்களின் ஆதரவையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
குறிப்பாக விஜய் அக்கருத்தை தெரிவித்த சில நிமிடங்களிலேயே அதனை வரவேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விஜய்யின் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, சிந்தனை செல்வன் ஆகியோரும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் ஆதவ் ஆர்ஜுனாவுக்கு தன்னிடம் போனில் பேசக் கூட திருமாவளவன் நேரம் தராமல் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக நமது மின்னம்பலம் தளத்தில், ‘பேசாத திருமா… ஒதுக்கப்பட்டாரா ஆதவ் அர்ஜுனா?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா தற்போது அம்பேத்கர் தொடர்பான புத்தகத்தை எழுதியுள்ளாராம்.
இந்த புத்தகத்தை வரும் அம்பேத்கர் நினைவு தினமான வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், சென்னையில் நடக்க இருக்கும் பிரமாண்ட விழாவில் அந்த புத்தகத்தை திருமாவளவன் வெளியிட, அதன் முதல் பிரதியை விஜய் பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்த விஜயை, திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் ஒரே மேடையில் சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மேலும் குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் மக்கள்!
நடிகர் அஜித் பெயரில் ரேசிங் வெப்சைட் : போலியா? உண்மையா?