அரியலூர் மாவட்டம் அங்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஏப்ரல் 19) வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது இரண்டு கட்சிகளுக்கிடையே நடக்கின்ற அதிகாரப் போட்டி அல்ல. ஒரு புறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பலுக்கு இடையே நடைபெறுகிற தேர்தல்.
சங்பரிவார் கும்பலுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலே நடக்கிற ஒரு தர்ம யுத்தம் தான் இந்த தேர்தல். இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறோம்.
அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற வாக்களியுங்கள் என்று பொதுமக்களுக்கு இந்தியா கூட்டணி அறைகூவல் விடுத்துள்ளது.
அரசமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காத, சங்பரிவார் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கிற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது.
நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த தேசத்தை மீட்பதற்கான தீர்ப்பை தமிழகத்தில் இருந்து எழுத தொடங்குகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நாள் தான் இன்றைய வாக்குப்பதிவு நாள்.
தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாஜக அரசே செயல்படும் என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி செயல்படலாம். அது தவறு. தேர்தல் ஆணையம் இன்றிலிருந்தாவது நடுநிலையோடு ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: சிகரம் தொட்ட தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
யமஹா RX100 பைக்கில் சென்று வாக்களித்த ரங்கசாமி