திருவண்ணாமலையில் போலீசாரை இழிவாகப் பேசிய விவகாரத்தில் விசிக மாவட்டச் செயலாளர் பகலவன் மீது கட்சித் தலைவர் திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிவில் பிரச்சினை தொடர்பாக ஆரணி டவுன் காவல் நிலையத்திலேயே எஸ்.ஐ.கிருஷ்ணமூர்த்திக்கும் விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் என்கிற பகலவனுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து உயரதிகாரிகள் உத்தரவுப்படி பகலவன் கைது செய்யப்பட்டு ஜனவரி 7ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். 20 நாட்களுக்குப் பிறகு அவர் பிணையில் வெளியே வந்தபோது, பாஸ்கரன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினருக்கு எதிராகக் கோஷமிட்டனர். அதோடு காவல்துறையினரை இழிவாகவும் பேசினர்.
இந்த விவகாரத்தில் ஜனவரி 29ஆம் தேதி இரவு விடிய விடிய வேட்டையில் ஈடுபட்ட திருப்பத்தூர், திருவண்ணாமலை போலீசார் விசிகவினர் 12 பேரை கைது செய்தனர்.
ஆனால் பகலவன் இன்னும் கைது செய்யப்படவில்லை. தலைமறைவாக இருக்கும் அவர் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் பகலவனை கட்சியில் இருந்து மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்து திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது பாராட்டுதலுக்குரியதே.
எனினும் கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும். அவ்வாறின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட போக்குகள் கவலையளிப்பவையாக உள்ளன.
எனவே,இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய மாவட்டச் செயலாளர் பகலவன் மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
இதுகுறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு பின்னர் நியமிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
“தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது”: அதானிக்கு ஹிண்டன்பெர்க் பதிலடி!