சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜூன் 21) பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ”பொதுவாழ்க்கைக்கு வரக்கூடியவர் எந்த காலத்திலும் வரலாம்.
நடிகர் விஜய், மாணவர்களிடம் கோவல்கர், சாவர்க்கர் போன்றவர்களை பற்றிக் கூறாமல், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை படிக்க சொல்லியிருக்கிறார். அதனை வரவேற்கிறோம்.
அதேநேரத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
ஆனால் சினிமா பாப்புலாரிட்டி இருந்தால் போதும், முதல்வராகி விடலாம் என்ற எண்ணத்துடன் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு உள்ளது.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படவில்லை. அவர்கள் தங்களது தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கேரளாவில் மம்மூட்டி, மோகன் லால் ஆகட்டும், கர்நாடகாவில் ராஜ்குமார் ஆகட்டும், இந்தியில் அமிதாப் பச்சன் ஆகட்டும் அவர்கள் யாருமே தங்களது சினிமா பாப்புலாரிட்டியை வைத்து அரசியலுக்கு வர நினைக்கவில்லை.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் வேறு ரகம். அவர்கள் பாணியிலேயே மற்றவர்கள் வந்துவிட முடியாது. தமிழ்நாட்டில் அப்படி அரசியலுக்கு வந்தவர்கள் பின்வாங்கியதை நாம் பார்த்திருக்கிறோம்.
மக்களுக்கு தொண்டு செய்து, தியாகங்கள் செய்து மக்களுக்காக சிறைக்கு சென்ற எத்தனையோ தலைவர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் எளிதாக பின்னுக்கு தள்ளி, முதல்வர் ஆகிவிடலாம் என்று சிலர் கனவு காண்கின்றனர்.
இந்த நினைப்பு தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது.” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
மேலும் அவர், ”மணிப்பூரில் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் அதைபற்றி ஒருவார்த்தை கூட கேட்காமல், நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றியே கேட்டு கொண்டிருக்கிறீர்கள். இதுவே மக்களுக்கு எதிரான செயல் தான்.
பத்திரிக்கையாளர்கள் அரசியல் மனசாட்சியுடன் நடந்துக்கொள்ளவேண்டும்” என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
டாஸ்மாக் மூடுவிழா: எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை கடைகள்?
மணிக் கணக்கில் மேக்கப் போடும் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!
குடியரசுத் தலைவர் வராதது தமிழகத்திற்கு தலைகுனிவு: ஆர்.பி.உதயகுமார்