திமுகவை தாண்டி திருமா போடும் டெல்லி ரூட்?

அரசியல்

திமுக கூட்டணியில் இருக்கும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  பல்வேறு முக்கிய சந்தர்ப்பங்களில்  கூட்டணி என்ற  கட்டுப்பாட்டையும்  தாண்டி  திமுக அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விபரீதங்கள்,  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில்   விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்  உடனடி எதிர்வினை ஆற்றினார். ஆனாலும் பிறகு  திமுக அரசை காப்பாற்றும் வகையிலும் செயல்பட்டார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில்  காவல்துறையை  கடுமையாக விமர்சித்தார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்.   அதன் பிறகு  சென்னையில் அக்கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில்… நாடு தழுவிய அளவில்  மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த பிரச்சினையை தேசிய பிரச்சினையாக மாற்றினார்.

அதேபோல ஆம்ஸ்ட்ராங்  படுகொலை செய்யப்பட்டவுடன்  தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்  நிலவுகிறது என்று  குறிப்பிட்ட திருமாவளவன்,  சில நாட்கள் கழித்து  முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த பிறகு,  “ஆம்ஸ்ட்ராங்  கொலை- ஆருத்ரா- பாஜக என்ற முக்கோணத்தில்  தீவிரமாக விசாரிக்க வேண்டும்”  என்று  கோரிக்கை வைத்தார்.

இப்படி  திமுகவோடு  உரசுவதும் சமரசம் ஆவதுமான  ஒரு போக்கில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள்  இருக்கின்றது.

இந்த நிலையில் தான்  ஜூலை 24ஆம் தேதி  டெல்லியில் நடந்த  ஒரு நிகழ்வு மீண்டும் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

ஆந்திராவில்  தேசிய  ஜனநாயக கூட்டணியிலே இடம் பெற்ற  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்தலில் வெற்றி பெற்று  சமீபத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.   அவர் ஆட்சிக்கு வந்த பிறகு  எதிர்க் கட்சியான  ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்  கட்சியின்  நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.  அவர்களது உடைமைகள்  சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜூலை 24ஆம் தேதி   ஆந்திர அரசின் தாக்குதல்களை கண்டித்து டெல்லி ஜந்தர் பந்தரில்  போட்டோ, வீடியோ கேலரிகளுடன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி.

Image

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற  சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி, திருணமூல்  காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்ட பல கட்சியினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரை சென்று ஆதரவளித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும்,  கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும்  டெல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஜெகன்மோகன் ரெட்டிக்கு தங்கள் தார்மீக ஆதரவை தெரிவித்தார்கள்.

ஜூலை 24ஆம் தேதி இரவு  ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து டெல்லியில்,  தான்  நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்து ஆதரவு தெரிவித்தவர்களுக்கு  நன்றி தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி, அதிமுக,  உத்தவ் தாக்கரே  சிவசேனா, திருணமூல்  காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்  ஆகிய கட்சிகளைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.   இன்னும் குறிப்பாக  அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த அகிலேஷ் யாதவ்,  அதிமுக எம்பி தம்பிதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஜெகன்மோகன் ரெட்டியின்  இந்த  நன்றி பட்டியலில்  திமுகவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும்,  அவருடன் தொடர்ந்து  இணக்கப் போக்கை திமுக பேணி வருவதாக   டெல்லி வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

இந்த நிலையில்தான், ஜெகன் மோகன் ரெட்டி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு  சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்  திருமாவளவன்.

இதுகுறித்து விசிக புள்ளிகளிடம்   விசாரித்த போது,   “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆந்திராவில் நடைபெறும் ஆட்சிக்கு எதிரான போராட்டம் அது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்ற பல்வேறு கட்சிகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்கள்.  அந்த வகையில் நாங்களும் ஆதரவு தெரிவித்தோம்.  இதற்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று சொல்கிறார்கள்.

வேந்தன்

share market : வார இறுதி நாள்… உயர்வுடன் தொடங்கிய பங்கு சந்தை!

ராயன் முதல் சட்னி சாம்பார் வரை… இன்றைய ஓடிடி & தியேட்டர் ரிலீஸ்!

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *