தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பதிவு செய்யப்படாத, பயங்கரவாத பாசிச அமைப்பாக இயங்கி வருகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகம் வழங்கும் தொடக்க நிகழ்வை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், திருமாவளவன் துவங்கி வைத்தார். மனுஸ்மிருதி புத்தகங்களை திருமாவளவன் பொதுமக்களிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் “திருமணம் உள்ளிட்ட ஈமச்சடங்குகள் வரையில் இந்துச் சமூகத்தில் பின்பற்றப்படுகிற அனைத்துமே மனுஸ்மிருதியின் வழிகாட்டுதலின் படி தான் நடக்கிறது. பார்ப்பன வருணத்திலிருந்து சூத்திர வருணம் வரையில் நான்கு வருணங்களைச் சார்ந்த பெண்மணிகள் அனைவருமே சூத்திரர்களாக நடத்தப்பட வேண்டும் என்பது மனுஸ்மிருதியின் வழிகாட்டுதல் ஆகும்.
இதுதொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில், விசிக சார்பில் மனுஸ்மிருதி புத்தகத்தை விநியோகம் செய்கிறோம். அதற்கு முக்கியமான காரணம், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பது தான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் கோட்பாடு , கொள்கை அறிக்கை மனுஸ்மிருதி தான்.

சமூக நீதி, சமத்துவம் கூடாது என்பது தான் மனுஸ்மிருதியின் அடிப்படை கோட்பாடாகும். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த ஏன் அவசியம் வந்தது? உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ் பதிலளிக்க முடியாமல் பின்வாங்கி ஓட்டமெடுத்துள்ளார்கள். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பதிவு செய்யப்படாத, பயங்கரவாத பாசிச அமைப்பாக இயங்கி வருகிறது.” என்றார்.
செல்வம்
கோவை வழக்கில் ஆதாரங்கள் அழிப்பு : மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி
தெலங்கானா இடைத்தேர்தல் : பாஜக VS டிஆர்எஸ்… வெற்றி பெறப்போவது யார்?