“இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும்” – விசிக மாநாட்டில் திருமா

Published On:

| By Selvam

விசிக மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு இன்று (அக்டோபர் 2) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, “மதுவிலக்கு என்பது தான் நமது ஒற்றைக் கோரிக்கை. இது புதிதாக நாம் எழுப்புகிற கோரிக்கை அல்ல. கெளதம புத்தர் காலத்தில் இருந்து இந்த கொள்கை பேசப்பட்டு வருகிறது.

திருமாவளவன் ஏன் திடீரென்று மதுவிலக்கு கொள்கை பேசுகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். புத்தர், அம்பேத்கர், பெரியார், திருவள்ளுவர், வைகுண்டர் ஆகிய மனிதர்களின் கொள்கையை உள்வாங்கியவன். அதனால் அந்த ஞானம் உதித்தது.

நாங்கள் சாதிப்பெருமை, மதப்பெருமை பேசி திரியக்கூடியவர்கள் அல்ல. புத்தர் கொள்கையை பேசக்கூடியவர்கள். விசிக மாநாட்டில் இதுவரை பயன்படுத்தப்படாத காந்தி மற்றும் ராஜாஜி ஆகியோரது கட் அவுட்டுகளை வைத்திருக்கிறோம். ஏனென்றால் இது அரசியல் உள்நோக்கம் கொண்ட மாநாடு அல்ல. மதுவை வேண்டாம் என்கிற அத்தனை தலைவர்களின் வாழ்த்துக்களும் நமக்கு தேவை.

உலகம் முழுவதும் மதுவிலக்கு வேண்டும் என்று புத்தர் சொன்னார். நான் எளியவன். அதனால் இந்தியாவிலும், தமிழகத்திலும் மதுவிலக்கு வேண்டும் என்று சொல்கிறேன். புத்தர் மட்டுமல்ல, யேசு பெருமான், நபிகள் நாயகம் என எந்த மகானும் மதுவை ஆதரித்ததில்லை. மதுவை ஒழிக்க முடியாது என்று அதை கண்டும் காணாமலும் போனவர்கள் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளுண்ணாமை என்கிற பெயரில் வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பேசும்போது இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று நான் பேசினேன். இதனால் தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டாம் என்று நான் பேசியதாக சிலர் விமர்சனங்கள் செய்கிறார்கள். தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும். உழைக்கும் மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். மனிதவளம் வீணாகிறது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: திருமா மாநாட்டில் எவ்வளவு கூட்டம்? ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்!

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel