ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் .திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு, உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, அனுமதி அளிக்கும்படி தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி நேற்று (செப்டம்பர் 26) சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய்தார்.
அதில், ’நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.
தற்போது பாஜக மாவட்டத் தலைவர்கள் விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் பெட்ரோல் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில்,
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால், அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும்.
எனவே, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த ஊர்வலத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்’ என கோரியிருந்தார்.
திருமாவளவன் மனு தாக்கல் செய்தது குறித்து, தமிழக பாஜக துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் விமர்சித்து இருந்தார்.
இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 27) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’உங்கள் கட்சியில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இருப்பதாக உண்மைக்கு புறம்பான ஒரு தகவலை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளீர்கள்.
யார் அந்த மாநிலங்களவை உறுப்பினர்? தவறான தகவலை அளித்தால் மனு தள்ளுபடியாகி விடும் என்று தெரிந்து விளம்பரத்திற்காகத்தான் மனு தாக்கல் செய்தீர்களோ?’ எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தம்முடைய மனுவை அவசர வழக்காக இன்று (செப்டம்பர் 27) அல்லது நாளை (செப்டம்பர் 28) விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது.
ஆனால் நீதிபதி, ’ஏற்கெனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும்’ என கேள்வி எழுப்பியதுடன், இதை அவசர வழக்காகவும் விசாரிக்க மறுத்துவிட்டார்.
’தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள்’ என தொல்.திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தினார்.
தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
ஆனால் நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாகத்தான் தாக்கல் செய்யமுடியும் என விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
குமரி அனந்தனுக்கு வீடு ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்
ஆ.ராசாவின் நீலகிரி பயண திட்டம் ரத்து!