திமுக கூட்டணியில் இருந்தாலும், தீராத தொல்லைகள்! ஆட்சி – அதிகாரத்துக்கான காலம் கனிந்துவிட்டது! – மீண்டும் பொங்கிய திருமா

Published On:

| By Aara

திமுக கூட்டணியில் இருந்தாலும் நமக்கு அதிகாரிகளின் நெருக்கடிகள் குறையவில்லை என்றும் பானை சின்னத்தை தக்க வைக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். thirumavalavan open talk about

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியின் விசிக செயலாளராக இருந்த, மறைந்த செல்வச்சீமான், மற்றும் கொல்லப்பட்ட மேகவண்ணன் ஆகியோரது  படத்திறப்பு நிகழ்வில் இன்று (பிப்ரவரி 2) கலந்துகொண்டார் திருமாவளவன்.

அந்த நிகழ்வில் பேசிய திருமாவளவன்,  “கடந்த இரு நாட்களாக நாடாளுமன்றம் நடந்து வருகிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் நாடாளுமன்றம் செல்ல முடியவில்லை. நாளை அதிகாலை டெல்லி செல்ல வேண்டும். விசிகவை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு காரணம்  செல்வச் சீமான், மேகவண்ணன் போன்ற லட்சோப லட்சம் விடுதலை சிறுத்தைகளின் தியாகம்தான்.

இந்திய அளவில் நம்பர் ஒன் அம்பேத்கர் இயக்கம் விசிகதான்

அகில இந்திய அளவில் அம்பேத்கர் இயக்கங்களில் சாதனை படைத்தது விசிக கட்சிதான். வடக்கே உத்தரப்பிரதேசத்தில் பல பத்தண்டுகளுக்கு முன்பே பகுஜன் சமாஜ் கட்சி கன்ஷிராம் அவர்களின் பெரு முயற்சியால் அங்கீகாரத்தைப் பெற்றது. வேறு எந்த மாநிலத்திலும் அம்பேத்கர் இயக்கம் மாநில கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்நாட்டில் விசிக சாதித்துக் காட்டியிருக்கிறது. இது சாதாரணமானது அல்ல. நாம் ஒவ்வொருவரும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டும்.

பானை சின்னத்தை தக்க வைக்க வேண்டும்!

எத்தனை இடர்கள், எவ்வளவு நெருக்கடிகள், எவ்வளவு அவமானங்கள், அவதூறுகள், ஓய்வில்லாத உழைப்பு என ஓடிக் கொண்டே இருந்தோம். இப்போது மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று நமக்கென்று பானை சின்னம் என்கிற சிறப்பான சின்னத்தையும் பெற்றிருக்கிறோம். எனவே நாம் பெருமையோடு சொல்லலாம். இது சிறுத்தைகளின் சாதனை. நமது வரலாற்றில் ஒரு மைல் கல்.

ஆனாலும் நாம் கட்டுக்கோப்பாக இயங்க வேண்டும், ஒற்றுமையாக உழைக்க வேண்டும். பரந்துபட்ட அளவில் அனைத்து மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அடுத்தடுத்த தேர்தல்களில் போதிய வாக்குகளைப் பெற்றால்தான் பானை சின்னத்தை தக்க வைக்க முடியும்.

எந்த கட்சியாக இருந்தாலும் குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை பெற வேண்டும் , அல்லது குறிப்பிட்ட எம்.எல்.ஏ. அல்லது எம்பிக்களை பெற வேண்டும். இப்படி வெற்றியை தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே பானையை தக்க வைக்க முடியும்.

அப்படி ஒரு நிரந்தரமான சின்னம் கிடைத்திருப்பதன் மூலம் நமக்கு காலம் என்ன அறிகுறியை உணர்த்துகிறது என்றால்… உன்னாலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அதற்கான காலம் கனிந்துவிட்டது.

இதற்கான வாய்ப்பை நாம் நழுவ விடக்கூடாது. ஒற்றுமையாக இருந்து கட்டுக்கோப்பாக உழைத்தால் அது வெகு தொலைவில் இல்லை.

திமுக கூட்டணியில் இருந்தாலும்…

ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் நமக்கு  நெருக்கடிகள் குறைந்துவிட்டனவா இல்லை.  2 எம்.பி.க்களை பெற்றிருக்கிறோம், 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றும் நமக்கு நெருக்கடிகள் குறையவில்லை.

வழக்கம்போல காவல்துறையினர் நம் மீது, ‘கூட்டணிக் கட்சியாக இருந்தால் என்ன, திமுகவுக்கு உற்ற துணையாக இருந்தால் என்ன? உங்களை எளிதாக வளரவிட மாட்டோம் என்று காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் குருதியில் சாதி உணர்வோடு  நம்மை அடக்குவதில் உறுதியாக இருக்கிறார்கள். வேங்கைவயல், மேல்பாதி, கண்டமங்கலம்  இதற்கு ஒரு சான்று.

தேர்தல் உத்திகள் என்பது வேறு, இதுபோன்ற முரண்பாடுகளை எதிர்கொள்ளும் உத்திகள் என்பது வேறு. சனாதன சக்திகள் இந்த மண்ணில் வேர்கொள்ள பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் மேற்கொண்டால் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் இதை விட மோசமான நிலையை நாம் எதிர்கொள்ள நேரிடும். thirumavalavan open talk about

நம்மால் அம்பேத்கர், பெரியார் பெயரைச் சொல்லி அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். திமுக ஆட்சியில் இருக்கும்போதே பெரியாருக்கு எதிராக கொச்சையான விமர்சனங்களை செய்பவர்கள் உருவாகிவிட்டார்கள்.

திமுக, இடதுசாரி இயக்கங்களோடு இணைந்து பிற்போக்கு சக்திகளை எதிர்கொள்ளவேண்டும் என்ற உத்தியை கையாள்கிறோம்.  திமுக கூட்டணியில் இருந்து நம்மை வெளியேற்ற பலர் சதி செய்கிறார்கள், சதி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நோக்கம் நம்மை வெளியேற்றி பலவீனப்படுத்துவதே.

முதல்வரை சந்திப்பேன்…

பாமகவை போல, நம்மால் அரசியல் செய்ய முடியாது. நாம் அப்படி  அரசியல் செய்தால், நம்மை இந்த தமிழ்நாடு கடுமையாக புறக்கணிக்கும். அதுதான் இந்த சமுதாயத்தின் எதார்த்த நிலை. ஆகவே விடுதலை சிறுத்தைகள் ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருக்கும் நிலையில் கூட தொடர்ந்து விசிகவுக்கும் தலித்துகளுக்கும் எதிராகவே காவல்துறை இயங்குகிறது. இது வேதனையளிக்கிறது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.  கண்டமங்கலம் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்.

விசிகவின் கொடி கோட்டையில் பறக்காது என்று சொல்ல முடியாது. நாம் ஒற்றுமையோடு உறுதியாக செயல்பட்டால், அடுத்த தலைமுறையையும் அரசியல்படுத்தி அரவணைத்தால்… எல்லா சமூகத்தினருக்காகவும் குரல்  கொடுத்தால், அந்த தகுதிக்குரிய ஒரே இயக்கம் விசிகதான். கோட்டையில் நம் கொடி பறப்பது கம்பசித்திரமல்ல” என்று பேசினார் திருமாவளவன். thirumavalavan open talk about

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel