தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 25) மாலைக்குள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி தெரிவித்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி சமூக நல்லிணக்க பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 25) மனு அளித்த பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
”சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் யாரோ தன்னுடைய காருக்கு தீ வைத்து விட்டதாகப் புகார் கொடுத்தார்.
ஆனால் விசாரணைக்குப் பிறகு அவரே தனது காருக்கு தீவைத்து விட்டு நாடகமாடினார் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். அவர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாஜக பிரமுகர்.
எனவே தற்போது சொல்லப்படுகிற கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்குப் பின்னால் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
காவல் துறை இந்த கோணத்திலும் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பாஜக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவர்கள் சோஷியல் மீடியாவில் மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் மக்களை நெருங்குவதற்காக வன்முறைகளைத் தேடுகிறார்கள். தங்களது கட்சி உங்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவும் என்று கூறி மக்களை நெருங்குவதற்கு வன்முறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள்.
ஆகவே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் உண்மை முகத்தைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
இஸ்லாமியர்களை என்.ஐ.ஏ கைது செய்திருக்கிறது. அவர்கள் தவறு செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஒரு உள்நோக்கத்துடன் தொடர்ந்து முஸ்லீம் வெறுப்பை விதைத்து வருகிறது.
திடீரென்று ஒரு அமைப்பின் மீது என்.ஐ.ஏ அமைப்பை ஏவி கைது செய்கிறார்கள்.
உண்மையிலேயே அவர்களுக்கு அயல்நாட்டுத் தீவிரவாதிகளோடு தொடர்பு இருக்குமானால் அவர்கள் தண்டிக்கட்டும்.
ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த 8 ஆண்டுகளில் இது உண்மையாக இருந்திருந்தால் பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்பையும் ஏன் தடை செய்யாமல் இருக்கிறார்கள்.
தடை செய்யக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. உண்மையிலேயே ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்த அமைப்போடு தொடர்பு இருக்குமேயானால் ஏன் அமைதி காக்கிறார்கள்.
வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக இந்த நாடகத்தை ஆடுகிறார்கள். ஒரு வெறுப்பை விதைக்கிறார்கள்.
தேசிய அளவிலே பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்புகள் தான் ஆர்.எஸ்.எஸ் போல இளைஞர்களைத் திரட்டி பயிற்சி அளித்து வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் போலத் தீவிரவாதத்தை அல்ல அமைப்பு ரீதியான பயிற்சிகளை அளித்து வருகிறது.
தேசிய அளவில் முஸ்லீம் அமைப்புகள் வளர்ந்து வருவதை ஏற்க முடியாமல் தான் பயங்கரவாதிகளோடு ஒப்பிடுகிறார்கள் என்பது எங்களது குற்றச்சாட்டு.
உண்மையிலேயே அவர்களுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்குமானால் அவர்களைக் கைது செய்யட்டும்.
பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்டவர்கள் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
மோனிஷா
தீபாவளி பண்டிகை: மோடி வைத்த கோரிக்கை!
’எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே’: எஸ்பிபி பற்றிய சுவாரசியம்!