விசிக மாநாடு… அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமா

அரசியல்

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளில் விசிகவின் மகளிர் அணி சார்பில், மது போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.  இம்மாநாட்டில் அதிமுகவும் கலந்துகொள்ளலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி  69 பேர் உயிரிழந்தனர். இதை விசிக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டித்தன. கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் இதைக் கண்டித்து சென்னையில்  விசிக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுதும் மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையோடு அக்டோபர் 2 ஆம் தேதி  மது ஒழிப்பு மாநாடு நடத்துவோம் என்று அந்த ஆர்பாட்டத்தில் அறிவித்தார் திருமா.

மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று (செப்டம்பர் 10)  சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது இந்த மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அவர்  அழைப்பு விடுத்துள்ளது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக மாறியுள்ளது.

”மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது.  மதுவிலக்குக் கொள்கையில் திமுகவுக்கும் உடன்பாடு உண்டு, அதிமுகவுக்கும் உடன்பாடு உண்டு, இடது சாரிகளுக்கும் உடன்பாடு உண்டு. எனவே இந்த மாநாட்டுக்கு அதிமுக கூட வரலாம். இதை தேர்தலோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். மக்கள் நலனுக்காக மதவாத, சாதிய வாத சக்திகள் தவிர மற்ற அனைத்து ஜனநாயக சக்திகளோடும் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம். தேர்தல் நிலைப்பாட்டோடு இதைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்” என்று கூறியிருக்கிறார் திருமாவளவன்.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக பக்கம் வருவார்கள்” என்று வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்.

இந்த நிலையில் விசிகவின் மகளிர் மாநாட்டுக்காக அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. தேர்தலோடு இதை முடிச்சிட்டுப் பார்க்க வேண்டாம் என்று திருமாவளவன் குறிப்பிடடாலும் கூட அதிமுகவுக்கான இந்த அழைப்பு விவாதமாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

ஆசிரியர்கள் போராட்டம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்!

போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்பு : மாணவர்கள் தவிப்பு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *