thirumavalavan contest in mp election
விசிக போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச் 19) அறிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
தொடர்ந்து விசிக வேட்பாளர்கள் யார் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என்று விசிக தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி இன்று (மார்ச் 19) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சித் தலைவர் திருமாவளவன்,
“சிதம்பரம் தொகுதியில் நானும், விழுப்புரத்தில் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுகிறோம் என்று அறிவித்தார்.
“இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். விசிக போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வெற்றி பெறுவோம்.
ரவிக்குமார் இரண்டாவது முறையாக விழுப்புரத்தில் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் 6ஆவது முறையாக நான் போட்டியிடுகிறேன். ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளேன். இந்த முறையும் சிதம்பரம் மக்கள் என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இருந்த பாஜக, நாட்டின் வளர்ச்சியை பற்றி பேசினார்களே தவிர எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. அம்பானியும், அதானியும்தான் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
எல்லா துறையும் பலவீனமாகியிருக்கிறது. உலக அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு கேவலமாக குறைந்திருக்கிறது. விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.
தொழிலாளர்கள், விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். சாதிய மதவாத அரசியலை நாளுக்கு நாள் பாஜக தீவிரப்படுத்துகிறது. இதை மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது.
ஆனால் ஈவிஎம்-ஐ வைத்து தில்லுமுல்லு செய்து ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்றும் மக்களால் உணரப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு 100 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
60, 70 சதவிகிதம் வாக்குப்பதிவு இருந்தால் அவர்களின் சதியை முறியடிக்க முடியாது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IPL 2024: இதுக்கு பருத்திமூட்டை ‘குடோன்லேயே’ இருந்துருக்கலாம்… கிண்டலடிக்கும் ரசிகர்கள்!