ஆர்.எஸ்.எஸ். பேரணி: தடை விதிக்க நடவடிக்கை – திருமாவளவன்
“ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடைவிதிக்க சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத அடிப்படையில் மக்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், இன்று (அக்டோபர் 11) தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் திமுக தவிர 24 கட்சிகள் கலந்துகொண்டன.
சென்னையில் சிம்சன் பெரியார் சிலையிலிருந்து அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெற்றது. இந்த மனித சங்கிலியில், திருமாவளவன், வைகோ, கி.வீரமணி, ஜவாஹிருல்லா, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இந்த அறப்போர் ஒரு நீண்ட நெடிய கருத்தியல் போருக்கான தொடக்க நிலை. சங்பரிவார் கும்பலின் சதி அரசியலை முறியடிப்பதற்கான ஒரு ஒத்திகைதான் இந்த போராட்டம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஏறத்தாழ 80 அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்திய வரலாற்றில் இவ்வளவு இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்கள் எதுவும் இல்லை. இந்த மண்ணில் சாதியவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இடம் கிடையாது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை கூறு போடும் இயக்கத்திற்கு இங்கு இடம் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணியை தடுப்பதற்கு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ஏக்நாத் ஷிண்டே அணிக்கு புதிய சின்னம்!
தேனி வெற்றி: பன்னீர் மகன் மனு உச்சநீதிமன்றத்திலும் தள்ளுபடி!