மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஜூன் 9) அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மதிமுகவின் 29-வது பொதுக்குழு வருகிற 14-ஆம் தேதி சென்னை அண்ணா நகர் விஜய் ஸ்ரீமகாலில் நடைபெற இருக்கிறது. ஓராண்டு காலமாக கிளை கழகம், வட்ட கழகம், ஒன்றிய கழகம், மாநகர, மாவட்ட கழக தேர்தல் 61 மாவட்டங்களில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் 4 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
மதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். 1401 பிரதிநிதிகள் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துவதற்காக விசிக தலைவர் திருமாவளவன் எனது வீட்டிற்கு வந்தார். அவரின் வாழ்த்து எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகிறது. தமிழகம் முழுவதும் விசிக ஒரு மாபெரும் சக்தியாக பரிணமித்திருக்கிறது. பக்கத்து மாநிலங்களிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. விசிக என்னை வாழ்த்துவது தமிழகமே வாழ்த்துவது போன்று உள்ளது” என்று தெரிவித்தார்.
திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வருகிற 14-ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூட இருக்கிறது. 11-ஆண்டுகளுக்கு பிறகு மதிமுக புத்துணர்ச்சியுடன் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளராக வைகோ, முதன்மை செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்க உள்ளனர். வைகோ தமிழக அரசின் தவிர்க்க முடியாத ஒரு சக்தி. அந்தவகையில் வைகோ அவர்களை விசிக முன்னணி நிர்வாகிகள் இன்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
அமைச்சரவை மாற்றமா? ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்ய பதில்!