வேங்கைவயல் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்த அப்பகுதி மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், வேங்கை வயல் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. எனினும் சம்பவம் நடந்து 100 நாட்களை கடந்தும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
விசிக போராட்டம்
இதற்கிடையே வேங்கைவயல் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கண்டனத்தை பதிவு செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற சில நாட்களிலேயே மனித மலம் கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சில நாட்களுக்கு முன்பு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போதும் ”வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல.” என்றார்.
இது வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு மீது திருமாவளவன் கொண்டுள்ள அதிருப்தியாகவே பார்க்கப்பட்டது.
தலித் மக்களுக்கு எதிராக இல்லை
இந்நிலையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது, வேங்கைவயல் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அவரிடம், “சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது? இதுவரை ஒரு குற்றவாளியையும் திமுக அரசு கைது செய்யவில்லை.. திமுகவுக்கு ஆதரவாக விசிக செயல்படுகிறதா?” என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு திருமாவளவன் பேசுகையில்,”இத்தனை நாள் ஆகும் என்று வழக்குகளில் உறுதியாக சொல்ல முடியாது. ராமஜெயம் படுகொலையில், இத்தனை வருஷம் ஆகியும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? சில வழக்குகளில் நிர்வாக சிக்கல் அல்லது விசாரணையில் உறுதிப்படுத்தப்படாத தகவல் இருக்கலாம்.
ஆனால், திமுக அரசு, தலித் மக்களுக்கு எதிராக இல்லை. வேங்கைவயல் பிரச்சனையில், யாரையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அரசுக்கு தலித்துக்கு எதிராக செயல்பட வேண்டிய கட்டாயம் இல்லை.” என்றார்.
கையை கட்டிட்டு பேசனுமா?
மேலும், “திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை. தலித்துகள் பிரச்சனைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம். நாளைக்குகூட(இன்று) கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்த போகிறோம்.
திமுககாரனா நான்? திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறதாலேயே இப்படி நீங்கள் அநாகரீகமாக பேசக்கூடாது. நாங்கள் அதிகாரிகளிடம் பேசிட்டு இருக்கோம், போராட்டம் நடத்திட்டு இருக்கோம், விசாரணை நடந்துட்டு இருக்கு, புலனாய்வு போய்ட்டு இருக்கு.. நான் ஆவேசமா பேசறேன்னு சொல்றீங்க? இதுக்கு பெயர் ஆவேசமா? கையை நீட்டி பேச வேண்டாம் என்றால், நான் கையை கட்டிட்டு பேசனுமா? மீடியா முன்னாடி குனிஞ்சு பேசணுமா?” என்றார்.
செய்தியாளர்களிடம் கோபமாக திருமாவளவன் பதிலளித்து பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிறுமைபடுத்தும் நோக்கம்
இந்நிலையில் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கோபமாக பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “ வேங்கை_வயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைமை மீதான நம்பகத்தன்மையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது.
பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல், நேர்மைத் திறத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது.
வேங்கைவயல் மக்கள் மீதான கரிசனம்?
திமுக – விசிக உறவில் விரிசலை ஏற்படுத்திட வேண்டுமென்பதோ; விசிக’வின் தனித்துவத்தைக் கொச்சைப்படுத்துவதோ; விசிக’வின் தலைமையைப் பலவீனப்படுத்த வேண்டுமென்பதோ; விசிக, தலித் மக்களுக்கு எதிராகவுள்ளது என்கிற தோற்றத்தை உருவாக்க வேண்டுமென்பதோ;
திமுக, தலித்துகளுக்கு எதிராக உள்ளது என்று தெரிந்தும் விசிக மற்றும் அதன் தலைமை, திமுகவுக்கு ஆதரவாக அதனைப் பாதுகாக்கவே முயலுகின்றன என்கிற ஒரு பொய்யான கருத்துருவாக்கத்தைச் செய்வதோ; அந்தக் கேள்வியின் அற்பமான உள்ளீடாக இருக்கலாம்.
ஆனால், அந்தக் கேள்வி பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான் இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மற்றொரு ட்விட்டில், இந்த சம்பவம் தொடர்பாக யாரும் நாகரிக வரம்பு மீறி செயல்பட வேண்டாம் என்றும், எச்சரிக்கையாக இருக்கவும் என விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கர்நாடக தேர்தல்: எடப்பாடிக்கு போட்டியாக வேட்பாளரை அறிவித்த பன்னீர்
சிறை தண்டனைக்கு எதிரான ராகுல் காந்தி மனு: இன்று தீர்ப்பு!
