டிஜிட்டல் திண்ணை: தொகுதி மாறுகிறாரா திருமாவளவன்?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் மெசஞ்சரில், ‘மக்களவைத் தேர்தல் ஜூரம் தொடங்கிவிட்டதா என்ன?’ என்ற ஒரு சிறு கேள்வியையும் அனுப்பியிருந்தது.

அதைப் பார்த்துவிட்டு மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.

“மக்களவைத் தேர்தல் 2023 இலேயே வரலாம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கருதுகிறார். குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியை அடுத்து இந்த முடிவுக்கு பாஜக வரலாம் என்று ஸ்டாலின் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இதுமட்டுமல்ல, தேர்தலை கொஞ்சம் முன்கூட்டியே கொண்டுவந்தால்  எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதற்கான கால அவகாசத்தை குறைக்கலாம் என்பதும் பாஜகவின் கணக்கு.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுகவிலும் இந்த எதிரொலி தெரியத் தொடங்கிவிட்டது.  அமைச்சர்கள் தங்களது தொகுதிகளிலும் தாங்கள் பொறுப்பு அமைச்சர்களாக இருக்கும் தொகுதிகளிலும் எம்பி வேட்பாளர் யார் என்ற ஆய்வை தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக திமுக முதன்மைச் செயலாளரும்  அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி சுற்று வட்டாரங்களிலும், சேலம், கள்ளக்குறிச்சி எம்பி தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் யார் என்ற தேடுதலை தொடங்கிவிட்டார்.

அண்மையில் சேலத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்களையும் அழைத்திருந்தார்.  சேலம் எம்பி தொகுதிக்குள் வரும் ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் தொகுதிகள் கள்ளக்குறிச்சி தொகுதிக்குள் வருவதால்தான் அவர்களையும் அழைத்திருந்தார். ஆக எம்பி தேர்தல் பற்றி பேசத்தான் அழைத்திருக்கிறார் என்று அப்போதே பேச்சு எழுந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் அமைச்சர் நேருவை சந்தித்திருக்கிறார். பொதுவான அரசியல் சூழல் குறித்து பேசிக் கொண்டிருந்தவர்கள் வரப் போகும் எம்பி தேர்தல் பற்றியும் பேசியிருக்கிறார்கள்.  அப்போதுதான் நேரு, ‘மறுபடியும் சிதம்பரம் தொகுதியில் நிக்கிறது உங்களுக்கு சரியா வராதுனு நினைக்கிறேன்’ என்று திருமாவிடம் சொல்லியிருக்கிறார்.  கடந்த தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு வலியுறுத்தியும் திருமாவளவன் பானை சின்னத்தில் நின்றார். இதை அப்போதே திமுக தொண்டர்கள் ரசிக்கவில்லை. தேர்தல் வேலையில் அவர்கள் தொய்வு காட்டியதாக விடுதலை சிறுத்தைகள் தரப்பில் சொல்லப்பட்டது. தேர்தல் முடிவில் இது தெரிந்தது.  

அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனை விட திருமாவளவன் 3 ஆயிரத்து 219 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார்.  மேலும் அப்போது சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது பாமகவினர் அடர்த்தியான பகுதிகளில் திருமாவளவனுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. திமுக, அதிமுகவைச் சேர்ந்த தலித் வேட்பாளர்களுக்கு எழாத எதிர்ப்பு திருமாவளவனுக்கு எழுகிறது என்று அப்போதே தேர்தல் களத்தில் இருந்த சிறுத்தைகள் இதுபற்றி வேதனைப்பட்டனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பாமக தீவிர கவனம் செலுத்துகிறது. இந்த நிலையில்தான் திருமாளவனிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த அமைச்சர் நேரு, ‘நீங்கள் சிதம்பரத்துக்கு பதில் திருவள்ளூர் தொகுதியில் நிற்கலாம்’ என்று யோசனை தெரிவித்திருப்பதாக திமுக வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள். திருவள்ளூர் தொகுதியில் இப்போது காங்கிரஸ் எம்பியாக ஜெயக்குமார் இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. 

இதெல்லாம் மிக மிக ஆரம்பகட்ட பேச்சுகள்தான். ஆனாலும்  இந்த ஆரம்பகட்ட பேச்சுகளில் சில இறுதிகட்டம் வரைக்கும் கூட செல்லலாம் என்பதுதான் இப்போதைய அரசியல் நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

எம்ஜிஆர் – ஜெயலலிதா மட்டுமே ஏழைகளுக்காக வாழ்ந்தவர்கள்: எடப்பாடி

அதிகளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள்: அறிவுறுத்திய உதயநிதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share