இந்திய அரசியலில் டிசம்பர் 6ஆம் தேதி முக்கிய தினமாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்த சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி அவரது 68வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
அன்றைய தினத்தில் அம்பேத்கர் குறித்த புத்தகத்தை தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.
கடந்த 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டில் விஜய் பேசிய ‘பாசிசம் – பாயாசம்’ மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த பேச்சை திருமாவளவன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் புத்தக விழா தொடர்பாகவும், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் திருமாவளவனும், விஜய்யும் சுமார் ஒன்றரை மணி நேரமாக மொபைலில் யாரும் ஒட்டுக்கேட்க முடியாதபடி பேஸ் டைம் மூலம் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகி, திமுக கூட்டணியில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.
அம்பேத்கர் குறித்து 21 கட்டுரைகள்!
இதற்கிடையே விஜய் வெளியிட திருமா பெற்றுக்கொள்ளும் அந்த புத்தகம் எதை பேசுகிறது… அதன் விவரம் என்ன என்பது குறித்து விசாரித்தோம். அப்போது நமக்கு பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தது.
இந்த புத்தகத்தை விகடன் பப்ளிகேஷன் வெளியிடுகிறது. முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் இருந்து அம்பேத்கர் குறித்து பெற்ற 21 கட்டுரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. எழுதிய கட்டுரையும் அதில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த புத்தகத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அதாவது அம்பேத்கரின் நினைவு தினத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டதாம். அது முடியாமல் போகவே இந்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அதாவது அம்பேத்கரின் 134வது பிறந்த நாளான்று வெளியிட முடிவு செய்யப்பட்டதாம்.
புத்தகத்தை வெளியிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை முதலில் அழைத்தார்களாம். அவர் மறுத்துவிட, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளார்கள். அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லையாம்.
புத்தகத்தை வெளியிட திட்டமிடப்பட்டு சுமார் ஒரு வருடத்தை நெருங்கிய நிலையில், 1500 புத்தகங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தற்போது விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
இதனயடுத்து விகடன் வெளியீடு என்றும் ஸ்பான்சர் ஆதவ் அர்ஜூனா என்றும் குறிப்பிடப்பட்டு அம்பேத்கர் குறித்த அந்த புத்தகம் மீண்டும் வெளியீட்டிற்கு தயாரானது.
அதற்கான பணிகளில் விகடன் பப்ளிகேஷன் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமென்’ அமைப்பும் தீவிரமாக இறங்கின.
அதன்படி இந்த புத்தகத்தை விஜய் வெளியிட, திருமாவளவன் பெற்றுக்கொள்ள முடிவு செய்து இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
மேலும் புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 6ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் எங்கு நிகழ்ச்சி நடத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்கின்றனர்.
விழாவை தவிர்ப்பாரா திருமா?
பொதுவாக தேர்தல் நெருங்க நெருங்க எதிர் அரசியல் கட்சியினர் ஒரே மேடையில் அமருவதை தவிர்ப்பார்கள்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது.
இந்த நிலையில் திமுகவை அரசியல் எதிரி எனக் கூறி களத்தில் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன், திருமாவளவன் அமர உள்ளது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புரோ கபடி: முதல் இடத்தை பிடித்து தமிழ் தலைவாஸ் அசத்தல்!
30 கோடி இல்லனா மார்க்கெட் வேல்யூ… ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறிய பின்னணி!