thirumavalavan aadhav arjuna issue

பேசாத திருமா….  ஒதுக்கப்பட்டாரா ஆதவ் அர்ஜுனா?

அரசியல்

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கடந்த ஒரு மாத காலமாகவே ஒரு இறுக்கம் இருந்தே வந்தது. கட்சியில் ஆரம்பக் காலத்திலிருந்தே உழைத்து வந்தவர்களுக்கும், சமீபத்தில் கட்சிக்கு வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பெரிய அளவில் வெடித்து வந்தன. கஷ்டப்பட்டு ரத்தம் சிந்தி, ஒரு பெரிய பானையை (கட்சியின் சின்னம்) உருவாக்கினோம். அதை ஒரு கல்லெடுத்து அடித்து உடைக்க பார்க்கிறார்கள் என்று திருமாவளவனிடமே தங்கள் குமுறல்களை தெரிவித்து வந்தனர். காரணம் என்ன?

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா  ”விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி இல்லாமல் வடமாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது. 4 ஆண்டுகளுக்கு முன், சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் ஏன் துணை முதலமைச்சர் ஆகக்கூடாது?” என ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்விக்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், எம்.பி. சிந்தனை செல்வன், துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோரே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா வெளிப்படையாகவே பத்திரிகையாளர்கள் மூலம் வலியுறுத்தினார்.

நிலைமை சீரியஸாவதை உணர்ந்த திருமாவளவன் விழுப்புரம் போதை மற்றும் மது ஒழிப்பு மாநாடு முடிந்த பிறகு அவரை ஒதுக்கி வைக்கிறேன் என்று திமுக தலைமையிடம் தெரிவித்தாராம்.

ஆனால் இந்த தகவல் அன்றிரவே ஆதவ் அர்ஜுனாவிற்கு திமுக கேம்ப்பில் இருந்தே சென்றிருக்கிறது. அவர் திருமாவளவனை நேரில் சந்தித்து முறையிட்ட போது, அவர் அதிர்ந்துவிட்டாராம். நாம் சொன்ன தகவல் இரவே இவருக்கு வந்திருக்கிறது என்றால், எங்கேயோ குழப்பம் இருக்கிறது என்று நடவடிக்கையைத் தள்ளிப்போட்டாராம்.

அதோடு ஆதவ் அர்ஜுனா மீது கட்சிக்குள் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்பத்தில் கூறி வந்த திருமாவளவன், முடிவில் அவர் பேசியது சரிதான் எனக் கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் விஜய் மாநாட்டை ஒட்டி ஆதவ் அர்ஜுனா, “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியுள்ள சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள்” என்று உடனடியாக தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார்.

இம்முறை அறிவாலயத்தின் கோபம் வெளிவருவதற்குள் சிறுத்தைகளுக்குள்ளேயே கோபம் வெடித்தது. உடனடியாக கட்சித் தலைவர் திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், வன்னியரசு, எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் போன்றவர்கள் விஜய்யைக் கடுமையாகக் கண்டித்துப் பேசினர்.

கடந்த 28ஆம் தேதி திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் “இந்த அறிவிப்பின் மூலம் திமுக எதிர்ப்பும் திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே விஜய்யின் அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்ல ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து முயற்சித்தும் சந்திக்க நேரமோ, ஃபோனில் பேசவோக்கூட , திருமாவளவன் இதுநாள் வரை இடம் தரவில்லை என்கின்றார்கள் விடுதலை சிறுத்தை தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

ஆனால் “என்னுடைய செயல்பாட்டில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை, கட்சி வளர்ச்சி ஒன்றே என் குறிக்கோள்” என்பதை தலைவரிடம் மீண்டும் தெளிவுபடுத்திவிடுவார் ஆதவ் அர்ஜுனா என்கின்றார்கள் அவருக்கு ஆதரவாக உள்ள கட்சி நிர்வாகிகள்.

-கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தீபாவளியன்று விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி

‘அமரன்’ படகுழுவினரை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்

60,000 நெருங்கிய தங்கம் விலை….இதற்கு ஒரு எண்டே இல்லையா?

+1
0
+1
3
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *