”கோயில் கட்டினால் அல்ல, கட்டப்பஞ்சாயத்து செய்தால்கூட, பத்தே நிமிடங்களில் மிகப் பெரிய ஆளாகி விடலாம்” என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
’பாசறை முரசு’ இதழின் ஆசிரியர் மு.பாலன் எழுதியுள்ள ‘இன்னுமா நமக்கு சூத்திரர் பட்டம்’, ‘திராவிட சித்தாந்தமும் திணறும் வேதாந்தமும்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை வியாசர்பாடியில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நூல்களை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் பேசிய தொல்.திருமாவளவன், “கோயில் கட்டுவது என்பதே ஒரு பிசினஸ். நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை.
வேறு எந்த பிசினஸிலும் இல்லாத வருமானத்தைத் தருவது கோயில் பிசினஸ். திருப்பதி கோயிலுக்கு கிடைக்கும் வருமானத்தைவிட வேறு எந்த பிசினஸில் வருமானம் கிடைக்கிறது.
திருப்பதியில் போய் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்களே? ஐயப்பன் கோயிலில் போய் கொட்டுகிறார்களே? எந்த கோயிலாக இருந்தாலும் சரி. திட்டமிட்டு ஒரு கோயிலை தெருமுனையில் கட்டுங்கள். 10 வருடத்தில் நீங்கள் பெரிய ஆளாக மாறிவிடுவீர்கள். அதற்காக மார்க்கெட்டிங்கிற்கு ஆட்கள் பிடிக்கத் தேவையில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
தொல்.திருமாவளவன் கூறிய இந்த கருத்தை பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர், இன்று வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ”தற்போது கோவில் கட்டுவது ஒரு வியாபாரமாக உள்ளது. தெரு முனையில் ஒரு கோவிலை கட்டினால் ‘பத்து ஆண்டுகளில்’ நீங்கள் பெரிய ஆளாகி விடலாம்.
கோவில் கட்டுவது என்பது கடவுள் நம்பிக்கையால் அல்ல. சிறந்த ‘பிசினஸ்’ – தொல்.திருமாவளவன். அப்படி செய்வது தவறுதான்.
ஆனால், அதைவிட தற்போது யாரும் இல்லாத வீடுகளை ஆக்கிரமிப்பது, புறம்போக்கு நிலங்களை வளைத்து போடுவது, வயதானவர்களின் சொத்துக்களை கட்டப்பஞ்சாயத்து செய்து ஆட்டையை போடுவது போன்ற பல்வேறு குற்றங்கள் அரசியலாக உள்ளது.
கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்புகள் செய்தால், பத்து ஆண்டுகள் என்ன? ‘பத்தே நிமிடங்களில்’ மிகப் பெரிய ஆளாகி விடலாம்.
கட்டப்பஞ்சாயத்து செய்வது சிறந்த அரசியல் அல்ல பகல் கொள்ளை” எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
ஜி தந்த ஜி20 அங்கீகாரம்: குஷியுடன் டெல்லி புறப்படும் எடப்பாடி
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை!