ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் நேற்று (செப்டம்பர் 14) பதிவிட்ட வீடியோ அரசியல் களத்தில் பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தநிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “திமுக அல்லது அதிமுக என்ற திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தந்தால் நல்லாட்சியாக அமையாது” என்று தெரிவித்திருந்தார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் செல்லூர் ராஜூ பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த திருமாவளவன், “1997-ல் இருந்து டெல்லியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தனிமெஜாரிட்டியில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பகிர்வை தருகிறார்கள். தமிழ்நாட்டில் அப்படி நடப்பது ஒன்றும் தவறல்ல, அப்படி ஒரு கோரிக்கை எழுப்புவதும் தவறில்லை.
2016-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை மையப்படுத்தி நாங்கள் ஒரு கருத்தரங்கை நடத்தியிருக்கிறோம். ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறோம். இது யாருக்கும் எதிராகவும், மிரட்டுவதற்காகவும் வெளிப்படுத்திய கருத்தல்ல. இது ஜனநாயக ரீதியாக எழுப்ப வேண்டிய கோரிக்கைகள்.
அதிகாரமில்லாதவர்களின் குரல் இது. விளிம்புநிலையில் உள்ள மக்களின் குரல் இது. அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தான் உண்மையான ஜனநாயகம். விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு கூட்டணிக்காக காய்களை நகர்த்தவில்லை” என்றார்.
2026-ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு இந்த அழுத்தம் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தேர்தல் வரட்டும். அப்போது பதில் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மது ஒழிப்பு… பாமகவுடன் பயணிக்க முடியாதது ஏன்? – திருமா சொல்லும் ஃபிளாஷ்பேக்!
“அமைச்சர் அன்பில் மகேஷ் நல்ல மனிதர்” – மகாவிஷ்ணு வாக்குமூலம்!