2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் இல்லை… திருமா ஓபன்டாக்!

Published On:

| By Selvam

மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற விவாதங்களால் திமுக – விசிக உறவில் கடந்த சில மாதங்களாகவே தொடர் குழப்பம் நிலவி வந்தது.

இந்தசூழலில், திமுக மூத்த நிர்வாகிகள் சிலர், திருமாவளவனிடம் “கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை விளக்கினர். திருமாவும் இந்த சிக்கல்களை உணர்ந்திருப்பதாகவும் அதனால் திமுக கூட்டணியில் உறுதியாக பயணிப்பார்” என்று நவம்பர் 14-ஆம் தேதி ஸ்டாலின் – திருமா அரியலூர் கெமிஸ்ட்ரி! ஆட்சியில் பங்கு… பிராக்டிகல் பின்னணி என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முகமது ஜின்னா எழுதிய NOBLE JOURNEY எனும் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று (நவம்பர் 17) கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “2015-ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பொருளில் கருத்தரங்கத்தை நடத்திய இயக்கம் விசிக. அகில இந்திய அளவில் டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் கூட 1977-ல் இருந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல தான் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அவசியமானது என்பதை விசிக தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம்.

ஆனால், அதற்கான சூழல் தமிழகத்தில் இன்னும் கனியவில்லை என்பது தான் நாம் ஒப்புக்கொள்ளும் உண்மை. இப்போது அனைத்துக் கட்சிகளும் இதைப் பேச தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஒரு தொடக்க நிலை. 2026  கூட்டணி ஆட்சிக்கு ஏதுவான ஒரு காலம் இல்லை என நான் நம்புகிறேன்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று திமுக அல்லது அதிமுக சொன்னால் அது நடைமுறைக்கு சாத்தியமானது. ஆனால், கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள் தங்கள் விருப்பத்தை சொல்வது தற்போதைய சூழலில் நடைமுறைக்கு சாத்தியமானதா என்ற கேள்வி எழுகிறது.

பொதுமக்கள் மத்தியிலும் அதற்கான ஒரு விழிப்புணர்வு தேவை. அரசியல் கட்சிகள் மத்தியிலும் அதற்கான ஒரு பார்வை வேண்டும். அந்த அளவுக்கு விரிவான ஒரு உரையாடல் இதுவரை நிகழவில்லை.

விசிகவை பொறுத்தவரை 2017-ஆம் ஆண்டு முதல் நாங்கள் திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் பங்கு உண்டு. அந்த கூட்டணியை மாநில அளவிலும் தேசிய அளவிலும் பாதுகாப்பதும் அதை மேலும் மேலும் வலுப்படுத்துவதும் விசிகவின் நோக்கங்களும் ஒன்று.

எனவே, விசிகவை கூட்டணியில் இருந்து வெளியேறப்போகிற கட்சி என்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். அது உண்மை இல்லை என்று மறுபடியும் அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். கூட்டணியை விட்டு வெளியே போக வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.

தொடர்ந்து அதிமுக கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருப்பதாக செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “அதெல்லாம் யூகம் தான். அதிமுக இதுகுறித்து விவாதித்தார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அப்படி எங்கும் நடந்ததாக நமக்கு தகவல் இல்லை. அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமியும் இதுவரை எதுவும் சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அவள், இவள்…. ஜோதிகாவை வறுத்து எடுக்கும் சுசித்ரா

சர்ச்சைப் பேச்சு… ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் கஸ்தூரி மனுத்தாக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share