ராமர் கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறப்பு விழா நடத்தி, மக்களை திசை திருப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் ராஜா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் திருமாவளவன் பேசியபோது, “இந்த மாநாடு பாஜக, ஆர்எஸ்எஸ், சனாதன சக்திகளுக்கு எதிரான மாநாடு. பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டி அடிக்கும் மாநாடு.
தமிழ்நாடு நீங்கள் நினைப்பது போல் வட இந்திய மாநிலங்களை போல அல்ல. இது சிறுத்தைகளின் மாநிலம். பொதுவாக சிறுத்தைகள் காடுகளில் தான் இருக்கும். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுத்தைகள் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டிகள் இங்கு வந்து பார்த்தால் தெரியும்.
தமிழ்நாடு முழுவதும் படைவீரர்களாக சிறுத்தைகள் இருக்கிறோம். உங்கள் உழைப்பில், உங்கள் செலவில் இந்த மாநாட்டுக்கு நிதி வழங்கியிருக்கிறீர்கள். அதற்காக நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தோழர்களே, மோடியை ஆட்சி அதிகார பீடத்திலிருந்து விரட்டி அடிக்க வேண்டும். இனி ஒருபோதும் தாமதிக்க முடியாது. இது வெறும் தேர்தல் அரசியல் கணக்கல்ல.
இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்திற்கு பேராபத்து வந்துள்ளது. அதனால் தான் இந்த மாநாட்டின் முகப்பு, வரவேற்பு, வளைவில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என மூன்று வாயில்கள் இருக்கின்றன. இந்த மாநாட்டின் விழா நாயகன் அரசமைப்பு சட்டம் தான். அரசமைப்பு சட்டத்தின் முகப்புரை தான் இந்த மாநாட்டின் கருப்பொருள்.
மோடி, அமித்ஷா கும்பல் மோசடி கும்பல். கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் என்ன சாதித்தார்கள்? உலக மகா நடிகர் மோடி, மக்களை ஏய்க்கிறார். அவரால் ஏதாவது திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம் என்று கூற முடியுமா?
ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று கூறினாரே, உங்களுக்கு வந்ததா? அப்படி என்றால் மோடி மோசடி பேர்வழியா இல்லையா?
மோடி, அமித்ஷாவின் சேவை என்பது அதானிக்கும் அம்பானிக்கும் எடுபிடி வேலை செய்வது தான். அதுதான் மோடி, அமித்ஷாவின் 10 ஆண்டு கால சாதனை. பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள், கனிமவளங்களை சுரண்டுகிறார்கள்.
பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என நான்கு வகை இந்துக்கள் இருக்கிறார்கள். இங்குள்ள நாமெல்லாம் இந்துக்களே இல்லை. கெளதம புத்தரின் வாரிசுகள்.
சூத்திர இந்துக்கள் என்கிற ஓபிசி மக்களை ஏமாற்றி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது மட்டுமல்லாமல், அதை தக்கவைப்பதற்கும் முயற்சிக்கிறார்கள். ராமர் கோவிலை கட்டிமுடிக்காமல் திறக்கிறார்கள், ஜெய் ஸ்ரீராம் முழங்குகிறார்கள். இவையெல்லாம் திசை திருப்புகிற சதி செயல்கள்.
சூத்திர இந்துக்கள் மோடியிடம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான மாநாடு தான் சிறுத்தைகளின் மாநாடு. விடுதலை சிறுத்தைகள் விளிம்பு நிலை மக்களுக்கான இயக்கம்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், ஓபிசி மக்கள் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கான ஒரு பேரியக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி.
மோடி, அமித்ஷா பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் ராமாயணம் பரவியிருக்கிறது, எங்க அப்பா பெயரும் ராமசாமி தான். ராமன் பெயரை உச்சரிக்கக்கூடாது என்பதற்காக தான் தொல்காப்பியன் என்று மாற்றி வைத்தேன்.
தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளை கொண்டுள்ள ஒரு மகத்தான பேரியக்கம். 38 மாவட்டங்களில் இருந்தும் 5 லட்சம் சிறுத்தைகள் இன்று காவிரி நதிக்கரையில் குழுமியிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாட்டிக்கொள்ளாமல் சூப்பர் மார்க்கெட்டில் திருடுவது எப்படி?… ரீல்ஸ் போட்டு சிக்கிய இளைஞர்கள்
சர்ச்சைகளுக்கு மையமாக ஆளுநர் இருப்பது ஏன்?: ப.சிதம்பரம் கேள்வி!