வேங்கைவயல் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு காவல்துறையின் கெடுபிடிகளை கைவிட ஆணையிட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஜனவரி 30) வலியுறுத்தியுள்ளார். Thiruma says Mk Stalin interfere
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “வேங்கைவயல் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் காலமாகியுள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், காவல்துறை கடுமையான கெடுபிடிகளை கையாண்டு வருகிறது. அந்த ஊரை ஒரு தீவாக மாற்றியிருக்கிறார்கள்.
உள்ளே யாரும் நுழைய முடியாது, வெளியே யாரும் போக முடியாது என்ற அளவுக்கு வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களை காவல்துறை தனிமைப்படுத்தியுள்ளது மிகுந்த கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட வேண்டும். காவல்துறையின் கெடுபிடிகளை கைவிட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காலமாகியிருக்கும் மூதாட்டியின் உடலை உற்றார் உறவினருடன் நல்லடக்கம் செய்வதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக இருந்தபோதும் வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். தேசிய அளவில் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பதில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பது என்பது அரசியல் ரீதியாக அவர்கள் எந்தளவுக்கு வலுவிழந்து வருகிறார்கள் என்பதை காட்டுகிறது. வெற்றியோ, தோல்வியோ தேர்தல் களத்தில் அவர்கள் தீவிரம் காட்டியிருக்க வேண்டும்.
பாஜகவும் அதிமுகவும் ஒருமித்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் கைகோர்க்க போகிறார்கள் என்று தான் தெரிகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோரோடு அவர்கள் கொண்டிருக்கும் உறவு விரைவில் வெட்டவெளிச்சமாகும்” என்றார்.
ஆதவ் அர்ஜூனா குறித்து திருமா பேசும்போது, “ஆதவ் அர்ஜூனாவை ஆறு மாதம் இடைநீக்கம் செய்திருந்தோம். பொதுவாக இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆறு மாத காலம் காத்திருந்து, தலைமையையோ, அல்லது ஒழுங்கு நடவடிக்கை குழுவையோ சந்தித்து விளக்கமளிப்பார்கள். ஆனால் ஆதவ் அர்ஜூனா உடனடியாக கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இப்போது தவெக தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றப் போகிறார் என்ற செய்தியை ஊடத்தின் வாயிலாக அறிந்தேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார். Thiruma says Mk Stalin interfere