கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 25) விசாரணைக்கு வந்தபோது, வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் மீதும் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்தநிலையில், வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக எதையோ மூடி மறைக்க காலம் கடந்த அவசர குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாக தாக்கல் செய்துள்ளது ஸ்டாலின் அரசு.
சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விடும் என்று ஆளும் ஸ்டாலின் அரசிற்கு ஏற்பட்ட அச்சத்தில் உருவாக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையா? இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்காக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது.
வேங்கைவயல் வழக்கில் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையின் மீது நம்பிக்கையின்றி திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காகவும்-உரிமைகளுக்காகவும் இறுதி வரை அதிமுக துணை நின்று போராடும்

விசிக தலைவர் திருமாவளவன்
வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சார்பில் பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சிபிசிஐடி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.
சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை.
தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்.
அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மலம் கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை.
சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை மத்திய குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித்
வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம்.
வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை.
இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது.
உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.
உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.