தொகுதி பங்கீட்டில் இழுபறி: ஸ்டாலினை சந்தித்த திருமா

Published On:

| By Selvam

Thiruma meets Mk Stalin in secretariat

திமுகவுடன் இன்னும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாத நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் இன்று (மார்ச் 8) பேச்சுவார்த்தை நடத்தினார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை 2 தனித்தொகுதி, 1 பொதுத்தொகுதி என மூன்று தொகுதிகளை ஒதுக்ககோரி திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்தநிலையில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்திருந்த நிலையில், விசிகவின் உயர்நிலைக்குழுவை கூட்டி கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “திமுக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் என்பதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது. கடைசி வரை 3 தொகுதிகள் கேட்போம். திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்போம்” என்று தெரிவித்தார்.

அதன்பிறகு திமுக – விசிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் 213 தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடனுதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

விசிகவிற்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், ஸ்டாலினை சந்தித்த பிறகு திமுக – விசிக இடையேயான கூட்டணி ஒப்பந்தமானது கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியாவின் தற்சார்பு சமூக மாற்ற விடுதலை – என்ன செய்ய வேண்டும்?- பகுதி 2

சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

ஜீத்து – மோகன்லாலின் ‘ராம்’ என்னாச்சு?

பியூட்டி டிப்ஸ்: அம்மைத் தழும்புகளை நீக்க ஆறு வழிகள்!