சனாதன எதிர்ப்பு குறித்து பேச திருவாரூர் திரு.வி.க.அரசு கல்லூரி முதல்வர் கீதா மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதைத் தொடர்ந்து, கடந்த 10 நாட்களுக்கு மேலாக சனாதனம் குறித்துதான் நாடு முழுவதும் பேசப்படுகிறது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்ட வேண்டும். அப்படி வெட்டி எடுத்து வருபவர்களுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என்று அயோத்தி சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா அறிவித்தார். இந்நிலையில் இந்த சாமியார் போலி சாமியார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இந்தசூழலில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகவாத் கடந்த 6ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ‘சனாதனத்திற்கு எதிராக பேசுவோர் எவரும் நாட்டின் அரசியல் அதிகாரம், அந்தஸ்தை தக்க வைக்க முடியாது. சனாதனத்தை எதிர்ப்பவர்களின் நாக்கை பிடுங்கி, கண்ணை நோண்ட வேண்டும்” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் இப்படி பேசியது தவறு என்று ஒரே கட்சியைச் சேர்ந்த மாநில தலைவரான அண்ணாமலை கூறினார்.
சனாதனம் பற்றி பேசியதற்கு இன்று உதயநிதி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மிரா சாலையில் வசிக்கும் நாக்நாத் காம்ப்ளி அளித்த புகாரின் பேரில் மும்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி சனாதனம் குறித்த சர்ச்சையும், விவாதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருவாரூர் திரு.வி.க.அரசு கல்லூரி முதல்வர் சனாதனம் எதிர்ப்பு குறித்து பேச மாணவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே கலைவாணன் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்று அனுப்பினார்.
அதில், “நம் நாட்டையே இந்திய தாய்திருநாடு என்றுதான் அழைக்கிறோம். நம் நாட்டினுள் ஊடுறுவிய சனாதன வாதிகளால் பெண்மை சிறுமைபடுத்தப்பட்டது. திராவிடம் தழைத்தபின் தான் பெண்ணினம் உயர்வு பெற்றது.
உதாரணமாக பெண்களுக்கு வாக்குரிமை, ரவிக்கை அணியும் உரிமை, சொத்துரிமை, கல்வி பெரும் உரிமை போன்றவை கிடைத்தது. இன்று சனாதனவாதிகள் மீண்டும் குலக்கல்வி முறையை புதிய கல்விக் கொள்கைகள் வாயிலாக திணித்திட முயலும் வேலையில், நமது திராவிட இயக்க இளம் தலைவர் சனாதனத்தை வேரோடு வெட்டி மண்ணோடு அகற்றுவோம் என சூளுரைத்திருக்கிறார்.
எனவே மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று மாலை 03.00 மணியளவில் காட்டூர், கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை ஏற்று திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வரும் மாணவிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். மாணவிகள் சனாதன எதிர்ப்பு குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். கல்லூரி முதல்வரின் இந்த கடிதம் தற்போது ட்விட்டரில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி முதல்வரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “திமுக அரசு மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு அரசு பள்ளி பாடப்புத்தகத்தில், ‘சனாதன தருமம்’ என்றால் அழிவில்லாத நிலையான அறம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
லிபியா வெள்ளம்: 6000 மக்கள் உயிரிழந்த சோகம்!
பிரபாஸின் ‘சலார்’ : ரிலீஸ் தேதி மாற்றம்!