பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றும், மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும், அது எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 15 ஆம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா சென்றுவிட்டு இன்று(அக்டோபர் 13) சென்னை திரும்பிய அண்ணாமலை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், முதலமைச்சருக்கு இரண்டு விதமான பயம் வந்திருக்கிறது. ஒரு பயம் அவருடைய கட்சியில் யார் எப்போது, என்ன செய்வார்கள் என்பது.
இரண்டாவது பயம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி. அந்த இரண்டும் சேர்ந்து முதலமைச்சரின் தூக்கத்தை கெடுக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே இந்தியை வைத்து மறுபடியும் மொழிப்போர் என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்.
இவர்கள் சொல்லுகிற இந்தி திணிப்பு என்பது எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் இந்தியை திணித்தபோது அதை ஒரு வாய்ப்பாக வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இங்கே ஆட்சிக்கு வந்தார்கள்.
தொடர்ந்து இந்தியைத் திணித்துக் கொண்டிருந்த காங்கிரசோடு பல ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்தார்கள். 3 ஆவது மொழியாக நீங்கள் எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று தான் பாஜக அரசு சொல்கிறது.
மும்மொழிக் கொள்கை என்பதே தற்போதுள்ள மத்திய அரசின் கருத்து. 3 ஆவது மொழி, தெலுங்கு, கன்னடம், மராட்டி என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
புதியக் கல்விக் கொள்கையின்படி 6 ஆம் வகுப்பு வரை தாய்மொழி தான் பயிற்று மொழியாக இருக்கும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறோம். எனவே அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்கும்.
இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வரும் 15 ஆம் தேதி போராட்டத்திற்கு அறிவித்து இருக்கின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது.
மத்திய அரசின் பல்கலைக்கழங்கள், மத்திய அரசின் போட்டி பரீட்சைத் தேர்வுகளில் பாஜக இந்தியை கட்டாய மொழியாக வைக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.
அவர்கள் சொல்லுகிற இரண்டு இடத்திலும் நான் படித்திருக்கிறேன். இந்தி ஒரு வார்த்தை தெரியாமல் ஆங்கிலத்தில் படித்து ஐ.ஐ.எம்-ல் படித்து பரீட்சை எழுதியிருக்கிறேன்.
அதேபோன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வேறு மாநிலத்தில் பணி செய்திருக்கிறேன். எனவே இல்லாத ஒன்றை சொல்லி, திமுவின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை மறைக்க கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்று பேசினார்.
கலை.ரா
இந்திய வட்டு எறிதல் வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!
தமிழில் வெளியாகும் வேறு மொழி படங்களின் லிஸ்ட்!