அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் மோடியை மட்டும் முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்றும் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்தார்.
கிருஷ்ணகிரியில், அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி இன்று (ஜனவரி 27) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கியிருக்கிறீர்கள். கூட்டணி பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்? பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?
“ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். இந்த குழு விரைவில் கூட உள்ளது. யாருடன் கூட்டணி என்று பொறுத்திருந்து பாருங்கள்.”
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?
“அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பிறகு அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை அறிவிப்போம்.”
டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் பாஜகவை ஆதரித்து கூட்டணி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இது அதிமுகவை பலவீனப்படுத்துமா?
“அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் ஒவ்வொரு அதிமுக தொண்டரின் கோபத்துக்கும் உள்ளாவார்கள். ஏனென்றால் பாஜகவை சேர்ந்த ஒரு சில தலைவர்கள், அதிமுகவை பற்றியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பற்றியும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அவர்கள் தலைமை பொறுப்பும் ஏற்றிருக்கிறார்கள். அவர்களுடன் இவர்கள் செல்கிறார்கள் என்றால் எங்களுக்கு நஷ்டம் இல்லை.”
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் 39 இடத்தில் வெற்றி பெறுவோம் என்று சொல்லியிருக்கிறாரே?
“தேர்தல் முடிந்தால் நாட்டு மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியும்.”
எம்.ஜி.ஆர் என்றால் ஒருவர் தான், காமராஜர் என்றால் ஒருவர்தான், அதுபோலத்தான் மோடி என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?
“என் மண் என் மக்கள் சுற்றுப்பயணத்தின் போது, தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதை மட்டும்தான் செய்கிறார். சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல், கமலாலயத்தில் பேட்டி கொடுப்பதை போல அனைத்து இடத்திலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
என்.டி.ஏ என்பது எங்கள் வீடு என அண்ணாமலை சொல்லியிருக்கிறார். இந்த கூட்டணி அமையும் போது அவர் மாணவராக இருந்திருப்பார் என நினைக்கிறேன். 1998ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக வடமாநிலங்களில் தான் இருந்தது. தென் மாநிலங்களில் பாஜக கிடையாது. பாஜகவுடன் கூட்டணி வைத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியை அழைத்து வந்து கூட்டணி கட்சியை முன்னிறுத்தி மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியவர் ஜெயலலிதா.
வட மாநிலங்களில் இருந்த கட்சியை தென்மாநிலங்களில் அறிமுகம் செய்து என்.டி.ஏ-வில் வரும் ‘தேசியம்’ என்ற சொல்லுக்கு ஒரு அமைப்பை உருவாக்கிக் கொடுத்தவர் ஜெயலலிதா.
இது அண்ணாமலைக்கு தெரியாது. வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியவர்களில் முக்கியமான தலைவராக இருந்தவர் ஜெயலலிதா.
அப்படி உருவாக்கிவிட்டு தமிழ்நாட்டுக்காக கேட்ட உரிமைகளை செய்து தராத காரணத்தால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அந்த கட்டடம் (என்.டி.ஏ) எங்களுடையது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
அண்ணாமலை பாஜக கட்சியை முன்னிலைப்படுத்தாமல், தன்னை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயை வாழ்த்தி பேசித்தான் மோடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
ஆனால் மோடியை உருவாக்கிய வாஜ்பாய் பற்றி அண்ணாமலை பேசுவதே இல்லை. பிரதமர் மோடியை மட்டும் முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார். அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும்.”
ராமர் கோயில் கட்டியதன் மூலம் பாஜகவுக்கு ஓட்டு வங்கி அதிகரிக்குமா…
“ராமர் அனைவருக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை யாராவது ஏமாற்றினால், ராமர் சும்மா இருக்கமாட்டார். அதற்குரிய தண்டனையை ராமபிரான் வழங்குவார்”
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காங்கிரசை ‘காலி’ செய்த திமுக அமைச்சர் கண்ணப்பன்: சிவகங்கை சீற்றமா?
பவதாரிணியின் நவராத்திரி பாடல்: கலங்கும் வசந்தபாலன்