அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விசாரிப்பதால் தன்னை வில்லனாக பார்ப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன.
இந்நிலையில், இந்த உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நேற்று ஊரக வளர்ச்சித் துறை ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்தார்.
2008ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு அதிகாரி கனேசனுக்கு வீட்டு வசதி வாரியத்தில் இருந்து வீடு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை 2012ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ., எம்.பி.,களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று ஐ.பெரியசாமியை 2023 மார்ச் 17ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
அதுபோன்று 2001-2006 வரை அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இந்த இரு உத்தரவுகளையும் மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
அப்போது, இந்த வழக்கில், ஐ.பெரியசாமி, வளர்மதி, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கூறுகையில், “வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் தன்னை வில்லன் போல் பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை. இது போன்ற வழக்குகளில் ஆழமாகச் செல்லும்போது இன்னும் அதிகமான வழக்குகள் வெளியே வருகின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை எதிர்கொண்டு சுத்தமாக வாருங்கள். கீழமை நீதிமன்றங்களின் செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்பது போல் தோன்றுகிறது” என்றார்.
கடந்த மாதத்தில் இருந்து இதுவரை அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என 6 பேர் மீது சூமோட்டோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
`எதிர்நீச்சல்’ மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள்… நடந்தது என்ன?
”சிகரத்தை நோக்கி சென்றவனை…”: மாரிமுத்து மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!
Comments are closed.