எந்த பணியையும் ஒழுங்காக செய்யாத ஒரு கொடூரமான ஆளுநரை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளதாக இன்று (ஏப்ரல் 2) அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர், “கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கின்ற திமுக அரசு, மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி இருக்கிறது. திமுக அரசு மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.
ஆனால், ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு என்று என்ன செய்துள்ளது? எல்லா வகையிலும் தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை தடுத்து நிறுத்துகிறது. பேரிடர் வந்தால் கொடுக்கப்பட வேண்டிய நிவாரண நிதியை கொடுக்காமல் உள்ளது. நாம் செலுத்தும் வரியை கூட மொத்தமாக மத்திய அரசே வைத்துக்கொள்கின்றது.
மேலும், மத்திய அரசு நம்மிடம் இந்தி, சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்ள சொல்கிறார்கள். மத்திய அரசு திட்டமிடும் பாடத்திட்டத்தில் தான் தமிழக மக்கள் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
மத்திய அரசின் நீட் தேர்வினால் தான் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தையும் தாண்டி, ஒரு கொடூரமான ஆளுநரை தமிழகத்திற்கு நியமித்துள்ளனர். கொடுப்பதை படிப்பதற்கு கூட திறன் இல்லாதவரை ஆளுநராக நியமித்துள்ளனர்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு சட்டத்திற்கும் கையெழுத்திடாமல், சாப்பிட்டு, தூங்கிக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.
இதை மறைப்பதற்காகவே, 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கச்சத்தீவு பிரச்சனையை தற்போது பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர்.
7 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆர்.டி.ஐ.யை மாற்றி 4 நாட்களுக்கு முன்பு ஒரு புதிய ஆர்.டி.ஐ.யை உருவாக்கி பச்சைபொய் சொல்லி வருகிறார்கள்.
படித்த மாநிலத்தில், பகுத்தறிவு உள்ள மாநிலத்தில், அனைவரும் கல்வி பெற்ற மாநிலத்தில் இதுமாதிரியான டுபாகூர் வேலைகள் எல்லாம் நீடிக்காது.
பொய்களை அடுக்கி, தோல்வியை மறைக்க பாஜகவினர் முயற்சித்து வருகின்றனர்.
10 ஆண்டுகளில் செய்யாததை, மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் செய்து விடுவார்களா?
10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை, பங்களாதேசத்திற்கும் அடியில் வீழ்த்தி வைத்துள்ளார் தற்போது பிரதமராக இருக்கும் மோடி.
தேர்தல் பத்திரம் என்ற ஒரு பெரும் ஊழல் செய்த கட்சி பாஜக. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து சம்பாதிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும் அரசாங்கம் பாஜக அரசாங்கம்” என பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”கச்சத்தீவு விவகாரத்தில் பொய் பிரச்சாரம்” : திமுக, காங்கிரஸை விமர்சித்த நிர்மலா சீதாராமன்
”பாஜக டெபாசிட் இழக்க வேண்டும்” : கலாநிதிக்கு வாக்கு சேகரித்த உதயநிதி