வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் உதயநிதி ஸ்டாலினின் படங்கள் வந்து விழுந்தன. அந்த படங்களை பார்த்துவிட்டு மெல்ல வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் போகிறார், துணை முதலமைச்சராகப் போகிறார் என்றெல்லாம் இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து பல முறை தகவல் புயல்கள் வீசிவிட்டன. ஆனால் அப்போதெல்லாம் அந்த புயல் செய்தி புஸ்வாணமாகத்தான் போயிருக்கிறது. ஆனால் இப்போது சில நாட்களாக மீண்டும் உதயநிதியை மையமாக வைத்து அமைச்சர் என்ற அந்த புயல் வேகமாக வீசத் தொடங்கியிருக்கிறது.
கடந்த நவம்பர் 27 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளின் போதே கிட்டத்தட்ட அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாடுவதைப் போலவே மாநிலம் எங்கும் திமுகவினர் கொண்டாடினார்கள். ஒவ்வொரு மாவட்ட திமுகவும் அதற்கு முன்பே கூட்டம் நடத்தி உதயநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என்று தீர்மானித்தார்கள்.
உதயநிதியின் பிறந்தநாளன்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அன்றே அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர், ‘உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று பேட்டிகளில் குறிப்பிட்டார்கள். இதுபற்றி உதயநிதி ஸ்டாலினிடமே செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அதையெல்லாம் முதலமைச்சர்தான் முடிவு செய்வார்’ என்று பதிலளித்தார்.
முன்பெல்லாம் இதுபோல் சில அமைச்சர்கள், ‘உதயநிதி அமைச்சர் ஆகவேண்டும்’ என்று பேசுவார்கள். பின் அது ஓய்ந்துவிடும். ஆனால் இந்த முறை தலைமையில் நடக்கும் முக்கிய நகர்வுகளை வைத்தே அன்பில் மகேஷ் முதலில் பேச அதற்குப் பின் பல அமைச்சர்களும் தொடர்ந்து உதயநிதி அமைச்சர் ஆவது உறுதி என்று பேசி வருகிறார்கள்.
ஆட்சி அமைக்கும் போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் வற்புறுத்தப்பட்டது. ஆனால் அப்போது அவர், ‘சட்டமன்ற உறுப்பினராக சிலகாலம் இருக்கட்டும்’ என்று தனக்கு அழுத்தம் கொடுத்தவர்களிடம் பதிலளித்திருந்தார்.
பின் ஒவ்வொரு ஆறு மாதத்திலும் உதயநிதி அமைச்சராவது பற்றிய பேச்சுகள் எழுந்து ஓய்ந்தன. ‘உங்கள் தந்தை கலைஞர் உங்களுக்கு மிக தாமதமாகவே வாய்ப்பளித்தார். அந்த தவறை உதயநிதி விஷயத்தில் நீங்கள் செய்துவிடக் கூடாது’ என்று ஸ்டாலினிடம் அவரது குடும்பத்தினர் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் உதயநிதி நிலுவையில் இருக்கும் படங்களின் படப்பிடிப்புகளை எல்லாம் வேகமாக முடித்திட முதல்வர் உத்தரவிட்டதாக செய்திகள் வந்தன.
இந்த நிலையில்தான் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கிறார் என்று திமுகவின் தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள். உதயநிதி அமைச்சராவது உறுதியாகிவிட்ட நிலையில் அவருக்கு என்ன துறைகள் ஒதுக்கப்பட போகின்றன என்ற ஆலோசனையும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
2006 ஆம் ஆண்டு ஸ்டாலினுக்கு தனது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவியைக் கொடுத்தார் கலைஞர். அதேபோல உதயநிதிக்கும் உள்ளாட்சித் துறையை அளிக்க இருப்பதாக ஒரு பேச்சு கிளம்பியது. ஸ்டாலின் பதவி வகித்தபோதும் சரி, கடந்த அதிமுக ஆட்சியில் வேலுமணி பதவி வகித்தபோதும் சரி உள்ளாட்சித் துறை ஒரே துறையாக இருந்தது.
ஆனால் இப்போது அது நகர்ப்புற வளர்ச்சித் துறை என்று நேரு கையிலும், ஊரக உள்ளாட்சித் துறை என்று பெரிய கருப்பன் கையிலும் இரண்டாக இருக்கிறது. இந்த நிலையில் உதயநிதியை அமைச்சராக முடிவு செய்திருக்கும் ஸ்டாலின் அவருக்கு கொடுப்பதற்காக பிற அமைச்சர்களிடம் இருக்கும் முக்கியமான துறைகளைப் பறித்து அவர்களை புண்படுத்த வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அவ்வப்போது சில சலசலப்புகள் எழுந்தாலும் அதற்காக முக்கிய துறைகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என்பது ஸ்டாலினின் முடிவாக இருக்கிறது.
அப்படியென்றால் உதயநிதிக்கு என்ன துறையைக் கொடுக்கப் போகிறார் ஸ்டாலின் என்ற கேள்வி எழுகிறது. யாரிடம் இருந்தும் முக்கிய துறைகளை பறிக்க வேண்டாம் என்று முடிவு செய்த ஸ்டாலின் தான் இப்போது வைத்திருக்கும் துறைகளில் ஒன்றான சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையை உதயநிதியிடம் கொடுக்க இருக்கிறார்.
மேலும் தற்போது அமைச்சர் கீதாஜீவனிடம் இருக்கும் துறைகளில் ஒன்றான மகளிர் மேம்பாடு, அமைச்சர் மெய்யநாதனிடம் இருக்கும் துறைகளில் ஒன்றான இளைஞர் நலன் ஆகிய துறைகளை உதயநிதியிடம் கொடுப்பது என்பதுதான் ஸ்டாலினின் முடிவு.
அதாவது பட்ஜெட் ரீதியாக அதிக முக்கியத்துவம் உள்ள துறைகளை விட… செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியவர்களுக்கான துறைகளை உதயநிதியிடம் கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
கடந்த ஜூலை, ஆகஸ்டில் தமிழகத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட்ஸ் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டது. அக்குழுவில் உதயநிதி ஸ்டாலினும் ஓர் உறுப்பினராக இடம்பெற்றிருந்தார். அந்த அடிப்படையிலேயே அவர் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்ஸ் நடக்கும் இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். ஒலிம்பியாட்ஸ் நிறைவு விழாவில் சில பரிசுகளையும் உதயநிதி வழங்கினார்.
அப்போதே இளைஞர் நலம் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி உதயநிதிக்கு கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்தன. சாதாரண துறையை உதயநிதியிடம் கொடுத்து அவர் மூலம் அந்ததுறையை முக்கியத்துவம் அடைய வைப்பதுதான் ஸ்டாலின் திட்டம் என்றும் அப்போதே அறிவாலய வட்டாரத்தில் கூறினார்கள்.
அதேபோல இப்போது உதயநிதிக்கான துறைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன என்கிறார்கள். மேலும் உதயநிதி அமைச்சராகிவிட்டால் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் வீரியமாக்கலாம் என்பதும் ஸ்டாலினுடைய கணக்கு. எனவே டிசம்பர் 14 முதல், அமைச்சர் உதயநிதியாக வலம் வருவார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
மாண்டஸ் புயல்: எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?
ஆளுநரைச் சந்தித்த ஆன்லைன் கேம் நிறுவன நிர்வாகிகள்!