திமுக அணிகளின் பொறுப்பாளர்கள் இவர்கள்தான்!

Published On:

| By Aara

in-charges of DMK teams

திமுகவில் மாநில அளவிலான 23 அணிகளின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்தை டிசம்பர் 28 ஆம் தேதியன்று  அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூட்டினார்.

மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில் திமுகவின் அணிகளுடைய செயல்பாட்டை வேகப்படுத்த வேண்டும் என்று அந்த கூட்டத்தில் வலியுறுத்திய ஸ்டாலின், ஒவ்வொரு அணியிலும் மாவட்ட அளவில் நிர்வாகிகளை விரைவாக நியமனம் செய்து ஜனவரிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது அணிகளின் செயல்பாட்டை வேகப்படுத்தவும் முடுக்கிவிடவும் 5 துணைப் பொதுச் செயலாளர்களுக்கும் 23 அணிகளை பகிர்ந்து பொறுப்பாளர்க்ளாக நியமித்தார்.

அந்தந்த துணைப் பொதுச் செயலாளர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அணிகளின் நிர்வாகிகள் நியமனம், செயல்பாடுகள் ஆகியவற்றை கண்காணித்து அந்தந்த அணிகளை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் ஸ்டாலின்.

இந்த வகையில் ஒவ்வொரு துணைப் பொதுச் செயலாளருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட அணிகள் குறித்து மின்னம்பலத்தில், ‘திமுகவில் ஆ.ராசாவுக்கு கூடுதல் பொறுப்பு’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.  இந்த நிலையில்  28 ஆம் தேதி அணிகள் கூட்டத்தில் ஸ்டாலின் பகிர்ந்தளித்த பட்டியல் இன்று (டிசம்பர் 31) கட்சியின் அதிகாரபூர்வமான ஏடான முரசொலியில் வெளியிடப்பட்டிருக்கிறது.  ஒரு சில அணிகளைத் தவிர பெரும்பாலான அணிகளின் பொறுப்பு நமது செய்தியில் குறிப்பிட்டபடியே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமிக்கு விவசாய அணி, விவசாயத் தொழிலாளார் அணி, மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி,   தகவல் தொழில் நுட்ப அணி ஆகிய அணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பொன்முடிக்கு  பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, நெசவாளர் அணி, அயலக அணி ஆகிய அணிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

These are the in-charges of DMK teams

துணைப் பொதுச் செயலாளரான ஆ.ராசா எம்பிக்கு  மாணவரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, வழக்கறிஞர் அணி (சட்டத்துறை) ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜு வசம்  தொண்டரணி, மீனவரணி, ஆதி திராவிடர் நல உரிமை பிரிவு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆகிய அணிகளுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி சுற்றுச் சூழல் அணி, இலக்கிய அணி,  கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை,  மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆகிய அணிகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

வேந்தன்

துணிவு: வங்கிக் கொள்ளையன் – போலீஸ்… இரட்டை வேடத்தில் அஜித்?

அன்பில் மகேஷுக்கு அன்பு கோரிக்கை வைத்த சீமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel