”விசிக நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் அரசியல் இருக்கிறது” : செல்வப்பெருந்தகை

Published On:

| By christopher

அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த கூட்டமும் நடத்த முடியாது. விசிக நடத்தும் மதுவிலக்கு மாநாட்டிலும் அரசியல் இருக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் காங்கிரஸ் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 16) கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியார் திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Image

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த கூட்டமும் நடத்த முடியாது. விசிக நடத்தும் மதுவிலக்கு மாநாட்டிலும் அரசியல் இருக்கிறது. இங்கு அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை.

காந்தியடிகள் பூரண மதுவிலக்கு கொள்கையை கொண்டவர். அதில் இருந்து காங்கிரஸ் ஒருபோதும் விலகாது.

இதுவரை தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு விசிக சார்பில் அழைப்பு வரவில்லை. இந்தியா கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, சலசலப்பும் இல்லை” என்றார்.

Image

மேலும் அவர், ”அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதை தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜா இட்டுக்கட்டி தொடர்ந்து வன்மமாக பேசி வருகிறார். அவர் இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் அவர் செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதை எச். ராஜாவுக்கு இறுதி எச்சரிக்கையாகவே விடுக்கிறேன்” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரூ.55 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

ஓணம் கொண்டாட்டம் : குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share