ஜெயலலிதா நினைவு நாள் உறுதிமொழியில் எடப்பாடி பழனிசாமி நன்னாள் என கூறியது தவறல்ல என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.
மதுரையில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக வருகிற டிசம்பர் 9, 13, 14 ஆம் தேதி சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான், அதிமுக புறநகர் மாவட்ட நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, தமிழகத்தில் மக்கள் விரோத அரசு தற்போது ஆண்டு கொண்டிருக்கிறது.
மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட வேண்டிய நிலை உள்ளது என்றார்.
ஓபிஎஸ் தொடர்ந்து நீதிமன்றத்தையே நாடி வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பன்னீர்செல்வத்திடம் தொண்டர்களும் இல்லை, கட்சி நிர்வாகிகளும் இல்லை, கட்சியும் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் மூத்த வழக்கறிஞர் இவருக்காக வாதாட தயாராக இல்லை.
ஆகையால் தான் இந்த வழக்கை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்கள். தோல்வி அடைவோம் என தெரிந்தும் எந்த வழக்கறிஞரும் வழக்கை வாதாட மாட்டார்கள். இதனால் தான் இலவச சட்ட மையத்தை நாட வேண்டிய பரிதாபமான நிலைக்கு ஓபிஎஸ் செல்லப்பட்டுள்ளார் என்று பதிலளித்தார்.
ஜெயலலிதா நினைவு நாளில் நன்னாள் என எடப்பாடி கூறியது பற்றிய கேள்விக்கு, மற்ற தலைவர்கள் போல எடப்பாடி பழனிச்சாமி எழுதி வைத்ததை பார்த்து படிக்கும் பழக்கம் இல்லாதவர், மனதில் பட்டதை கூறுபவர்.
உறுதிமொழி பத்திரத்தில் சில பிழை இருப்பதால் அந்த மாறுதலான வார்த்தைகள் வந்துள்ளது. அவர் கூறியதை நாங்கள் நல்ல நோக்கத்தில் தான் பார்க்கிறோம்.
ஐந்தாம் தேதி சிவனுக்கு உகந்த நாள் பிரதோஷம் என்பதால் நன்னாள் என கூறி இருக்கலாம்,
அல்லது அதிமுகவிற்கு சரியான தலைவர் எடப்பாடி பழனிசாமி என தேர்ந்தெடுத்து டெல்லிக்கு கூப்பிட்ட நன்னாள் எனவும் குறிப்பிடலாம் தவறான நோக்கத்தில் அதனை படிக்கவில்லை.
இதைவிட மிக தவறான வார்த்தைகள் எல்லாம் இன்றைய முதலமைச்சர் சொல்லி இருக்கிறார் என்று பதிலளித்தார்.
பொதுக்குழுவில் நல்லது நடக்கும் என ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஓபிஎஸ் கூட்டப் போவது கண்காட்சியாக இருக்குமே தவிர பொதுக்கூட்டம் அல்ல.
அவரிடம் இருந்த ஒரே ஒரு பேச்சாளரும் திமுகவிடம் போய்விட்டார். ஓபிஎஸ்க்கும், திமுகவுக்கும் இருந்த தொடர்பை இதன்மூலம் அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று ராஜன் செல்லப்பா பதிலளித்தார்.
கலை.ரா
மக்களவை: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!
தென்காசிக்கு முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!