உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த அயோத்தி சாமியாரின் பேச்சை வன்முறையாக கருதவில்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் பேசு பொருளானது. “டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும். எதிர்க்க கூடாது” என்று பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ச ஆச்சாரியா, உதயநிதியின் உருவப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டு எரித்ததோடு மட்டுமில்லாமல் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்திருந்தார்.
அயோத்தி சாமியாரின் இந்த அறிவிப்பு சர்ச்சையான நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.10 கோடி போதவில்லை என்றால் அதிகரிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அயோத்தி சாமியாரின் பேச்சில் வன்முறை இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாகவும், அயோத்தி சாமியாரின் சர்ச்சை பேச்சு தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “சனாதனம் குறித்த கருத்துக்குள் நான் செல்லவிரும்பவில்லை. அதிமுக அனைத்து மதத்தினரையும் சமமாக கருதக்கூடிய இயக்கம். அனைத்து மதத்தினரும் மதிக்கக் கூடிய கட்சி அதிமுக. இக்கட்சியில் சாதிமத வேறுபாடுகள் கிடையாது.
சாதுக்களே இந்த அளவிற்கு மனம் வெதும்பிப் போய் பேசி இருக்கிறார்கள். அதை வன்முறையாக நான் கருதவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்தார்.
மோனிஷா
“இந்தியா என்ற சொல் பாஜகவை மிரட்டுகிறது” – ஸ்டாலின்