தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட கோரி மத்திய அமைச்சரை சந்தித்ததால் எந்த பலனும் இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடக்கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் நேற்று (ஜூலை 20) டெல்லியில் மீண்டும் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் எழுதிக் கொடுத்த கடிதத்தை அமைச்சர் துரைமுருகன் கொடுத்தார்.
தொடர்ந்து டெல்லி சென்று திரும்பிய அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கர்நாடகா இதுவரை 26 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், 3 டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் கொடுத்துள்ளார்கள். இதன் விளைவாக 20 நாட்களுக்கு மட்டும்தான் டெல்டாவிற்கு தண்ணீர் தர இயலும். அதற்கு மேல் மழை வந்தால் தான் காப்பாற்ற இயலும். இல்லையென்றால் பயிர்கள் காயக்கூடிய நிலைமை.
இதனை முன்கூட்டியே உணர்ந்து தான் கடந்த 5 ஆம் தேதி டெல்லிக்கு சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
இரு மாநிலத்திற்குமே நீர் பற்றாக்குறை இருக்குமானால் அதனை எப்படி பங்கிட்டு கொள்வது என்பதை முடிவெடுக்க வேண்டியது ஆணையத்தின் பொறுப்பு. ஆனால் ஆணையம் மெத்தனமாக இருக்கிறது. நீர் மேலாண்மை ஆணையத்தை விரைவாக செயல்படுங்கள் என்று சொல்கின்ற அதிகாரம் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு தான் இருக்கின்றது. இதனால் தான் அவரை சந்தித்தேன். ஆனால் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தும் எந்த பலனும் இல்லை.
எனவே இந்த முறை முதல்வரே நிலைமையை விரிவாக எழுதி ஒரு கடிதத்தை என்னிடத்தில் கொடுத்து மீண்டும் நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றார். அதனடிப்படையில் இன்று நீர்வளத்துறை அமைச்சரிடம் கடிதத்தைக் கொடுத்து நிலைமையை விளக்கினேன்.
கடிதத்தை பெற்று கொண்டு அவர், ”அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஆணையத்திடம், இருக்கின்ற தண்ணீரை எப்படி பகிர்ந்து வழங்க வேண்டும் என்பதை செயல்படுத்த சொல்கிறேன்” என்றார். நானும் அதனைக் கேட்டு நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கை கை கொடுக்குமேயானால் தஞ்சை தரணியில் பயிர்கள் காப்பாற்றப்படும்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
மோனிஷா
”நடிகர் சிவாஜியை விட மிகப்பெரிய நடிகர் அண்ணாமலை தான்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Comments are closed.