இந்தியாவில் CIBIL ஸ்கோர் சரியாக அப்டேட் செய்யப்படாததால் சிக்கல்கள் ஏற்படுவதாக மக்களவையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று (டிசம்பர் 4) தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசு நேற்று மக்களவையில் வங்கிச் சீர்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இது இந்தியாவின் வங்கித்துறையை முழுவதுமாக தனியார்மயமாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தநிலையில் வங்கிச் சீர்திருத்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் மக்களவையில் பேசுகையில், “எமதர்மனுக்கு நம் செயல்பாடுகள் அனைத்தையும் சித்ர குப்தா கணக்கு காட்டுவது போல், ‘சிபில்’ என்ற நிறுவனம், நமது வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தையும் பதிவு செய்து வருகிறது.
நீங்கள் கார் கடன் வாங்க விரும்பினால், அல்லது நாட்டின் நிதியமைச்சர் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், அனைத்தும் ’CIBIL (சிபில்) மதிப்பெண்ணைப் பொறுத்தது. ஆனால் இந்த சிபில் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது.
உண்மையில் TransUnion CIBIL Limited என்ற தனியார் நிறுவனம் தான் இந்தியாவில் சிபில்-ஐ நிர்வகிக்கிறது.
TransUnion CIBIL என்பது தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் கடன் மற்றும் வங்கி பரிவர்த்தனை பதிவுகளை சேகரித்து பராமரிக்கும் கடன் தகவல் நிறுவனம் (CIC).
60 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் கடன் வரலாற்றை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் பராமரிக்கும் இந்நிறுவனம் சிபில் ஸ்கோரை மதிப்பிடுகிறது.
சிபில் காரணமாக பெரும்பாலான மக்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
ஆனால் அவர்கள் எங்கள் கடன் வரலாற்றை சரியாகப் புதுப்பிக்கிறார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. அதில் வெளிப்படைத்தன்மை இல்லை, மேல்முறையீடு செய்ய எங்களுக்கு வழி இல்லை. எங்களுக்கும் மதிப்பீடு செய்யும் நிறுவனத்திற்கு இடையே முழுமையான சமச்சீரற்ற தன்மை உள்ளது. இதற்கு இப்போது வரை தீர்வு இல்லை” என்று கூறினார்.
மேலும் அவர், “ஒவ்வொரு முறையும் நாங்கள் வங்கியிடம் ’நான் எனது கடனை சரியான நேரத்தில் செலுத்திவிட்டேன்’ என கூறும்போது, அவர்கள் பதிலுக்கு ’உங்கள் CIBIL மதிப்பெண் மோசமாக உள்ளது’ என்று கூறுவார்கள்.
சிபிலை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. விவசாயிகளுக்கு, அரசிடம் இருந்து மானியம் கிடைக்கும் போது, மானியத்தை பயன்படுத்தி கடனை திருப்பி செலுத்தும் போது, சிபில் அப்டேட் செய்வதில்லை.
இந்த சிபில் ஸ்கோர் அப்டேட் செய்வதிலும், இதுதொடர்பாக புகார் அளிக்கவும் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
இந்த விஷயங்களைச் சீர்திருத்துவதன் மூலம் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான வாய்ப்பை பாஜக அரசாங்கம் தவறவிட்டுவிட்டது” என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
விஜய் – அண்ணாமலையை பாராட்டிய சீமான்
எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை மறுக்கப்படுகிறது : ராகுல் காட்டம்!