There is no room for talk of withdrawing the CAA

”சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை” : அமித்ஷா திட்டவட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைத்தையும் மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 11ஆம் தேதி அமல்படுத்தியது.

எனினும் தங்கள் மாநிலங்களில் இச்சட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் டெல்லி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை இன்று (மார்ச் 14) சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,

”இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது உரிமை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை.

பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிப்போம் என 2019 தேர்தலில் கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றியுள்ளோம்.

சிஏஏ சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமல்படுத்தினோம். இச்சட்டம் குறித்து கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு தரப்பினரிடையே பேசியுள்ளேன். சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை பறிக்கப்படாது என உறுதி அளித்துள்ளேன்” என்றார்.

மேலும் “சட்டத்தை இயற்றுவதற்கும், அமல்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை.

தேர்தலுக்கு பின்னர் அனைத்து மாநிலங்களும் இச்சட்டத்தை அமல்படுத்த ஒத்துழைப்பு தருவார்கள் என நினைக்கிறேன்.

ராகுல் காந்தி சிஏஏ சட்டத்தை ஏன் எதிர்க்கிறார் என்று பொதுமக்கள் மத்தியில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அவர் கட்சியின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும்.

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிஏஏ விவகாரத்தில் அரசியல் செய்து வருகின்றனர்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-இந்து

எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணையும் 500 பேர்!

”ஒரே நாடு ஒரே தேர்தல்”: குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்பித்தது ராம்நாத் கோவிந்த் குழு

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts