2023 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் தமிழகத்திற்கு ஒரு திருக்குறள் கூட கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று அறிவித்தார்.
வருமான வரி செல்லுவதற்கான ஆண்டு வருமானம் 5 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தியது. விவசாயக் கடனை 20 லட்சம் கோடியாக உயர்த்தியது. சிகரெட் மீதான வரியை உயர்த்தியது, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களின் வரி உயர்த்தியது போன்றவை வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது.
ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட் வழக்கம் போல் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது வருத்தம் அளிக்கிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் தங்களின் உரைகளில் தமிழ் குறித்தும், திருக்குறள் உள்ளிட்ட பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் மேற்கொள்காட்டி பேசுவது வழக்கம்.
ஆனால் தமிழகத்தை சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டாமல் தன்னுடைய உரையை முடித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வழக்கமாக மோடி அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு ஒரு திருக்குறளாவது கிடைக்கும். இம்முறை அதுவுமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றுமொரு பதிவில், “150 கல்லூரிகளை அமைப்போம் என்று நிதியமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டபொழுது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒற்றை செங்கல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
பழைய மற்றும் புதிய வருமான வரி அடுக்கு : செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?
பட்ஜெட்டில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து: எச்சரிக்கும் ஸ்டாலின்