தமிழகத்தில் 2026 தேர்தலில் மன்னராட்சிக்கு இடமில்லை, பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது என அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (டிசம்பர் 6) பேசியுள்ளார்.
சென்னையில் நந்தம்பாக்கத்தில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து நூலை உருவாக்கியவரும், வாய்ஸ் ஆப் காமென் நிறுவனரும், விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா பேசினார்.
அவர், “குடும்பத்தின் விருப்பத்தைத் தாண்டி எனது தாய் காதலித்தபோது ஜாதி கௌரவத்திற்காக விவசாயி ஒருவரை கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் எனது தாய் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஜாதிக் கொடுமைக்கு நேரிடையான சாட்சியாக நானே நிற்கிறேன். தமிழகத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி எனக்கு பெரியம்மா போன்றவர். எனது தாய்க்கு மிகவும் நெருக்கமான அவர் தான் அன்றைக்கு என்னை ஸ்போர்ட்ஸ் விடுதியில் படிக்க வைத்து, என்னை முழு மனிதனாக உருவாக்கினார்.
சிறுவயதில் நான் ஒரு நக்சலைட் ஆகனும் மாவோயிஸ்ட் ஆகனும் என என்னுடைய பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது வழிகாட்டுதலின் பேரில் பெரியார் மற்றும் அம்பேத்கர் கொள்கைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
பெரியார் கொள்கைகளை அடிப்படையாக கொண்டே இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியாக அண்ணாவின் தலைமையில் திமுக வெற்றி பெற்றது.
தேர்தல் அரசியலில் அம்பேத்கர் முழுமையாக ஈடுபட்டது கிடையாது. மத பெரும்பான்மை வாதத்தை எதிர்த்த அவர், அரசியல் அமைப்பை உருவாக்கி எல்லோரும் சமம் என்ற நிலைபாட்டை நாட்டில் கொண்டு வந்தார்.
விஜய்க்கு அரசியல், கொள்கைகள் தெரியுமா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால் கொள்கைகளை பேசிய பல கட்சிகள் மேடையில் ஏன் அம்பேத்கரை ஏற்றவில்லை?
2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சராக உருவாக்கப்பட கூடாது. தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை என மக்கள் நினைத்துள்ளனர்.
தமிழகத்தில் இனி கருத்தியல் தலைவர் தான் முதலமைச்சராக வேண்டும். தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார். புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக இந்த மேடை உருவாகி இருக்கிறது.
2011 கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 1 கோடியே 40 லட்சம் தலித்துகள் இருக்கிறார்கள். ஆனால் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று கோரினால், அதற்கு எதிர்ப்பு வருகிறது.
சாதாரண மனிதன் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூறியபோது, அதற்கு முதல் குரலாக ஒலித்தவர் விஜய் தான்.
சினிமாத்துறையில் தன்னை சுற்றியுள்ள 2000 கோடி ரூபாய் பிசினஸை விடுவதற்கு ஒரு மனசு வேண்டும். அது விஜய்யிடம் இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு சினிமா தொழில் நிறுவனத்தை நடத்தி அரசியல் மூலமாக லாபம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கால சூழல் காரணமாக திருமாவளவன் பங்கேற்கவில்லை. அவரது எண்ணம் முழுவதும் இந்த நிகழ்ச்சியின் மீது தான் இருக்கும்.
குடிநீரில் புதுக்கோட்டைய அருகே வேங்கவேல் கிராமத்தில் மனித மலத்தை கலந்தார்கள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்திற்கு விஜய் செல்ல வேண்டும். நீங்கள் களத்துக்கு வாருங்கள். தமிழகத்தில் ஊழலை எடுத்து பேசுங்கள். எல்லோரும் சமம் என்பது திராவிடம். தீண்டாமையை ஒழிப்பது முக்கியமில்லை. சாதியை ஒழிக்க வேண்டும். ” என்றார்.
இனிமேல் நெஞ்சுக்கு நேராக பேசுவோம். முதுகுக்கு பின்னால் பேச வேண்டாம்” என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?
“நாதக பிரிவினைவாத இயக்கமா?” : வருண் குமார் ஐபிஎஸுக்கு சீமான் காட்டமான பதில்!