பன்றி காய்ச்சல் எனப்படும் எச்1என்1 என்ற வைரஸ் காய்ச்சல் தமிழ்நாட்டில் வேகமாக பரவிவருகிறது. இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குகிறது. டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 965 பேருக்கு இந்த காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையான காய்ச்சல் இருமல், தும்மலால் பரவுகிறது என கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது.
குழந்தைகளைக் காக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், அதுவும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதால் புதுச்சேரியில் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று (செப்டம்பர் 17) முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 17 ) செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
’தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால், புதுச்சேரி போல இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை.
மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் காய்ச்சல் ஏற்பட்டால் மாணவர்களை தனிமைப்படுத்த பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், காய்ச்சல், உடல் வலி, தலை வலி இருந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் பெற்றோர்களை அறிவுறுத்தியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்