அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் தகராறு இல்லை: அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் எந்த தகராறும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்ரல் 26) டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார்.
தொடர்ந்து இன்று காலை டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். அப்போது, நேற்றைய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உடன் இருந்தார். இது வழக்கமான சந்திப்பு தான். கடந்த 5 மாதத்திற்கு முன் சந்தித்துப் பேசிய பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. எங்களுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் கிடையாது. தகராறு இருந்தால் ஈரோட்டில் எப்படி வந்து பிரச்சாரம் செய்திருப்பார்? எங்கள் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சிகள். அவரவர் கட்சிகளின் கொள்கைகளைப் பின்பற்றுகின்றோம். தேர்தல் நேரத்தில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றோம்” என்று பேசினார்.
நேற்று டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவருக்கும் அமித்ஷா சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக இன்று (ஏப்ரல் 27) காலை மின்னம்பலத்தில், “இந்த பக்கம் எடப்பாடி- அந்த பக்கம் அண்ணாமலை: டெல்லியில் அமித்ஷா சொன்ன மெசேஜ் என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருந்தோம்.
அந்த வகையில் அமித் ஷா அறிவுறுத்தலுக்கு பிறகு தான் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கு எந்த தகராறும் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார் எடப்பாடி.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியின் போது கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்ய முடியவில்லை. ஆனால் 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்யவில்லை. 28 ஆயிரத்து 723 கோடி குறைவாக செலவு செய்துள்ளார்கள்.
கொடநாடு சம்பவம் அதிமுக ஆட்சியில் நடந்தது. இதைக் கண்டறிந்து, கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு தான். நீதிமன்றத்தில் வழக்குகளும் முடியும் தறுவாயில் இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாத நேரத்தில் சாட்சிகள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். பின்னர் ஆட்சி மாறியது.
அப்போது கொடநாடு வழக்கில் கைதானவர்களை திமுக ஜாமீனில் எடுத்தது.
இந்த வழக்கில் உண்மைத் தன்மை வெளியே வர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை. இந்த வழக்கின் குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதில் திமுகவிற்கு என்ன லாபம் இருப்பது என்பதில் தான் மர்மம் இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ஓபிஎஸ் மனம் மாறி அதிமுகவிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா சென்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “கட்சி அலுவலகத்தில் இது குறித்து ஏற்கனவே பேசிவிட்டேன். ஒரு சிலரை தவிர அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று யார் நினைக்கிறார்களோ, கட்சி மீது விசுவாச மிக்கவர்கள் கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளலாம். துரோகம் இழைக்கின்றவர்களுக்கு இந்த கட்சியில் இடம் இல்லை” என்று பேசினார்.
மோனிஷா
மகன்.. மருமகன்.. அமைச்சர்.. ஸ்டாலின் மெளனம் ஏன்: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி
சூடானில் இருந்து 9 தமிழர்கள் உட்பட 1,100 இந்தியர்கள் மீட்பு!