காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கும்போது நான் தலைவராவேனா இல்லையா என்பது தெரிய வரும், என் மனதில் எந்த குழப்பமும் இல்லை என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்திருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள தேசியத் தேர்தலை மையமாக வைத்து ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் தொடங்கினார்.
3-வது நாள் பயணமான இன்று (செப்டம்பர் 9) தக்கலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல்காந்தி,
இது காங்கிரஸ் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட யாத்திரை. இதில் தலைவனாக இல்லை ஒரு கட்சியின் உறுப்பினராகவே கலந்துகொண்டுள்ளேன்.
நாட்டின் அனைத்து மூலைகளிலும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகள் என்ன, தேவைகள் என்ன என்பதை கேட்டறிவதே இந்த யாத்திரையின் நோக்கம்.
இந்தியாவில் எப்போதும் இரண்டு விதமான சிந்தனைபோக்கு உள்ளது. பலவித கருத்தோட்டங்கள் உள்ள இந்தியாவில் ஒற்றை கருத்தை திணிக்கும் முயற்சி நடக்கிறது.
அதிகார திணிப்பை எதிர்க்கும் போர் எப்போதும் தொடரும். நாட்டில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்தியுள்ள சேதங்களை சீர்செய்யவே இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
பா.ஜ.க நாட்டின் அனைத்து துறைகளையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரி துறை போன்றவற்றை வைத்து அழுத்தம் கொடுக்கிறது.
பலரும் பாஜக உடன் கைகுலுக்கி சுமூகமாகவே செல்ல விரும்புகின்றனர். தற்போது ஒரு அரசியல் கட்சியாக மட்டும் போராடவில்லை.
இந்த போராட்டம் மோசமான இந்திய அரசுக்கும் எதிர்கட்சிக்கும் இடையிலானது.
மதத்தின் அடிப்படையில், மாநிலங்களின் அடிப்படையில் நாடு பிளவுபட்டு கிடக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
விலைவாசி அதிகரித்துள்ளது. மோடிக்கு வேண்டப்பட்டவர் உலகின் 3-வது பெரிய பணக்காரராகியிருக்கிறார்.
தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும்போது நான் தலைவராக வரலாமா வேண்டாமா என்பது தெளிவாகும்.
நான் என்ன செய்வேன் என்பதை மிகத் தெளிவாக முடிவு செய்துவிட்டேன், என் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை.
இந்த யாத்திரை மூலம் என்னைப் பற்றியும் இந்த அழகான நாட்டைப் பற்றியும் ஓரளவு புரிந்துகொள்வேன், 3 மாதங்களில் நான் இன்னும் தெளிவுபெறுவேன்.
தமிழை கற்றுக்கொள்வது அவசியம். ஆனால் அது கடினமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று ராகுல்காந்தி பேசினார்.
கலை.ரா
ராகுலின் பாதயாத்திரை : தமிழகத்திலிருந்து செல்வது யார் யார்? தேர்வானது எப்படி?