ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு : ஆளுநர் தமிழிசை புது விளக்கம்

அரசியல்

தமிழ்நாட்டை தனிநாடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற அர்த்தத்தில் ஆர்.என்.ரவி சொல்லி இருக்கிறார் என்று தான் நினைப்பதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கடந்த 4ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.

அப்போது, “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன.

இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்” என்றார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறிய கருத்து அரசியல் தலைவர்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூகவலைதளங்களில் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது.

மேலும் கவர்னரின் கருத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவரிடம் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் ‘தமிழ்நாடு – தமிழகம்’ பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், “தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கூறிய உட்பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரிவினைவாத கருத்துக்கள் அதிகமாக இப்பொழுது வர ஆரம்பமாகியிருக்கும் நேரத்தில் அவர் அதை கூறியுள்ளார்.

அவர் சொல்வதில் தன்நாடு என்று எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டை தனிநாடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற அர்த்தத்தில் ஆர்.என்.ரவி சொல்லி இருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஏனென்றால் சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் சில அரசியல் தலைவர்களாக இருக்கட்டும், சில இயக்கங்களின் தலைவர்களாக இருக்கட்டும் அவர்கள் பிரிவினைபேசுவது அதிகமாகி வருகிறது. ஏதோ தமிழ்நாடு தனிநாடு போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.

நான் தமிழ்நாட்டை சார்ந்தவள், எனது மொழி தாய்மொழி, எனது மாநிலம் தமிழ்நாடு, எனது தேசம் பாரத தேசம். நாம் பாரததேசத்தில் ஒரு அங்கம் தான்.

இந்த எண்ணம் இல்லாமல் இதில் எந்த விதத்திலும் எதுவும் துண்டாடப்பட்டு விடக்கூடாது. நாம் அனைவரும் இணைந்து தான் இருக்க வேண்டும் என்பதை அவர் மறுபடியும் வலியுறுத்திருக்கிறார்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

உலகதர தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

கூச்சல்.. குழப்பம்.. : டெல்லி மேயர் தேர்தலில் களேபரம்!

+1
0
+1
1
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

2 thoughts on “ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு : ஆளுநர் தமிழிசை புது விளக்கம்

  1. ஆரியன் ரவி என்ன வேலை பார்க்கிறார்? தன் வேலை விட்டுட்டு அரசியல் பேச வேண்டாம்.
    இவங்க இந்தியா என்று சொல்ல மாட்டாங்க, பாரதம் என்று தான் சொல்லுவார்கள் ஏன்.

  2. தமிழக மீனவர்கள் வெளி நாட்டில் பிடிபடும்போது “தமிழக மீனவர்கள்” என்றும், குஜராத் மீனவர்கள் பிடிபடும்போது ” இந்திய மீனவர்கள்” என்றும் செய்திகள் வரும்போது அதற்கு என்ன சொல்லறது மேடம்?

Leave a Reply

Your email address will not be published.