'There is a problem in apologizing to Tamils': Union Minister Shobha Karandlaje
|

’தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பதில் சிக்கல் இருக்கு’: மத்திய அமைச்சர் நீதிமன்றத்தில் தகவல்!

செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே நடந்த  குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ’தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் தான் காரணம்’ என்று கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

ஷோபா மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரின் பேரில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 7ஆம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் அவர் மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெற அரசு தயாராக உள்ளது” என தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் விளக்கம் அளித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ”செய்தியாளர் சந்திப்பின் போது தமிழர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நிலையில் அதே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரினால் தான் சரியாக இருக்கும்” என நீதிபதி  கருத்து தெரிவித்தார்.

மேலும் வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்குள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ஷோபா மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

எனினும் இதுவரை ஷோபா மன்னிப்பு கேட்காத நிலையில் வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தரப்பில் ”ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது தான் செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக தலைமை வழக்கறிஞர் வலியுறுத்தியதில் சில சிக்கல்கள் இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், ”ஒரே நேரத்தில் சூடாகவும் குளிராகவும் இருக்க முடியாது. ஷோபா மன்னிப்பு கேட்பாரா அல்லது நீதிமன்றத்தில் அரசின் முன்மொழிவை எதிர்த்துப் போராட விரும்புகிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்” என ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கூறினார்.

தொடர்ந்து ஷோபாவின் மனுவை தள்ளுபடி செய்யவும் விரும்புவதாக நீதிபதி கூறிய போது, ​​இந்த வழக்கில் பாஜக எம்பி சார்பாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகியிருப்பதாகக் கூறி விசாரணையை ஒத்திவைக்க ஷோபா தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

இதனையடுத்து ஒரு வார கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ராயன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

போர் பதற்றம்… இஸ்ரேல் பிரதமருக்கு மோடி வைத்த டிமாண்ட்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts